தேர்தல் என்னும் திருவிழா

2016 சட்டமன்றத் தேர்தல் இதுவரை இல்லாத விசித்திரமாக மாற்றப்பட்டு விட்டது. முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையமே 90 நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கிவிட்டன.படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தலைக் காட்சிப்பொருளாக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் பல நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாக்களிக்கச் செய்வோம்; வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதை எளிமையாக்கிவிட்டோம்; வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகிறோம்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும்; ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசிவிடும்; நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டுவோம்; நெருக்கடியில்லாமல் நீங்கள் வாக்களிக்கலாம் என உத்தரவாதங்களைத் தந்துகொண்டிருக்கிறது.

சரியாகச் சொன்னால், அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தலுக்குத் தயாராகவில்லை. தங்களின் உரிமையாகவும் இருப்பாகவும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வலிமையைக் கையளிக்கப்போகும் வாக்காளர்களும் இன்னும் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் வாக்காளர்களும் தேர்தலைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் ஆறுமாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிப்புச் செய்கின்றன. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் மூன்று மாதத்திற்கு முன்பே அறிவிப்புச் செய்கிறது. இந்த அறிவிப்புக்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? இரண்டின் நோக்கங்கள் நல்லாட்சியை உருவாக்கி மக்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற அக்கறையின் பாற்பட்டதா? எனக்கு அப்படித்தோன்றவில்லை
இப்படி நான் நினைப்பதற்கு அடிப்படையான காரணம், தேர்தலை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கருதுகிறார்கள் என்ற நினைப்பதுதான். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறார்கள்; செயல்படுகிறார்கள். என்னைப் பொருத்துத் தேர்தல் நிகழ்வை நீண்டகாலம் நினைத்துக் கொள்ள வேண்டியவர்கள் வாக்காளர்கள். அதற்கடுத்து அரசியல்வாதிகள். மூன்றாவதாக கவனத்தைத் திருப்ப வேண்டியது தேர்தல் ஆணையம். கடைசியாக வரவேண்டியது ஊடகங்கள். இந்தவரிசை இங்கே நேர்மாறாகத் திரும்பி நிற்கிறது.

ஊடகங்கள் தேர்தலை விற்பனைப் பண்டமாக நினைக்கின்றன. அதனால் தான் அதன் அனைத்துக் கணபரிமானங்களையும் முன்வைத்து விளம்பரப்படுத்தி விற்கும் வேலையை முன்கூட்டியே தொடங்கி விடுகின்றன. செய்தித்தாள் என்னும் அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலகட்டத்தைவிடவும் முன்பே திட்டமிடும் வேலையைக் காட்சி ஊடகங்கள் செய்கின்றன. இந்த உண்மையை இந்தத்தேர்தலை முன்கூட்டியே அறிவித்த ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

நவீன வணிகக் கட்டமைப்பைக் கொண்ட காட்சி ஊடகங்கள் ’தேர்தல்’ என்ற காட்சிப்படுத்த முடியாத சொல்லைக் காட்சிப்படுத்திக் களிப்பூட்டும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டன. களிப்பூட்டும் காரணிகளைக் கண்டறிந்து கண்டறிந்து தேர்தல் நாள்வரை அவை தக்கவைக்கப்பாடுபடும். தக்கவைப்பதில் தான் அவற்றின் வணிகவெற்றி தங்கியிருக்கிறது. தேர்தல் முடிவிற்குப் பின் ஊடகங்கள் இன்னொரு விற்பனைப் பண்டத்தைத் தயாரிக்கப் போய்விடும்

ஊடகங்களைப் போலல்லாமல் ஆணையம் ‘தேர்தல்’ என்பதை ஒரு திருவிழாவாக நினைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தவேண்டிய திருவிழாவைத் திட்டமிடும் தற்காலிக உறுப்பினர்களைக் கொண்ட திருவிழாக்கமிட்டியைப் போலத் தங்களைக் கருதிக் கொண்ட மிகச்சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்திக் காட்டவேண்டும் என்ற அக்கறைதான் அதன் செயல்பாடுகள். ஊர்க்கூட்டம் நடத்தி, வரிவசூல் செய்து பணம் பிரிக்கும் வேலையில்லாததால் கொடியேற்றத்தில் தொடங்குகிறது தேர்தல் ஆணையம். நாள் குறித்தவுடன் ஒவ்வொருவரும் கிராம எல்லைக்குள் சுத்தபத்தமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கவேண்டுமென உத்தரவுபோடும் ஊர்ப் பெரியவர்களைப் போலக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கண்காணிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். திருவிழாக்காலக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி தங்களைப் பிரபலப் படுத்திக்கொள்ளும் நபர்களையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டுப் பெட்டியைக் கட்டிக் கொண்டு காணாமல் போய்விடும். அடுத்த ஐந்தாண்டுவரை அவர்களுக்கு அடையாளமே இருக்காது.
அரசியல்வாதிகள் அப்படிக்காணாமல் போகமுடியாது. ஏனென்றால் தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்குப் போட்டிக்களன். வாழ்வா? சாவா? என்னும் போட்டிக்களன். வாக்குக் கேட்பதில் தொடங்கி வெற்றிபெற்றாலும் தோற்றாலும் அவர்கள் வரவேண்டிய இடம் மக்களிடம்தான். வெற்றிபெற்றவர்களும்சரி தோற்றவர்களும்சரி அடுத்த தேர்தலை நினைத்துக் கொள்ளாமல் தப்பிவிடமுடியாது. வெற்றிபெற்றவர்கள் ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டும். தோற்றவர்கள், தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சரிசெய்யவேண்டும். நடந்த தவறுகள் இனித் தொடராது என்ற உத்தரவாதத்தைத் தரவேண்டும்.
தேர்தல் என்னும் திருவிழா நிகழ்வில் வடம்பிடித்துத் தேரை நிலைநிறுத்தும் பொறுப்புடையவர்கள் வாக்காளர்கள். அவர்களின் கால்கள் ஆழமாகத் தரையில் ஊன்றி நிற்கவேண்டும். ஆறுமாதத்திற்கு முன்னால் ஊடகங்களால் பண்டமாக ஆக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும் அந்தப் பொருளை ஊதிப் பார்க்க வேண்டும்; உரசிப்பார்க்கவேண்டும், முட்டிப்பார்க்கவேண்டும்; மோதிப் பார்க்க வேண்டும்; வெந்நீரில் விட்டுக் கலக்கிப் பார்க்கவேண்டும்; தண்ணீரில் விட்டுத் தடவிப்பார்க்கவேண்டும்.
நம்முடைய பிரதிநிதிகளை எடைபோட்டுத் தேர்வு செய்யவேண்டியவர்கள் வாக்காளர்கள் தான். அந்தப் பிரதிநிதிகள் தங்களுக்காக இருப்பார்களா? தங்களுக்கான நிர்வாகத்தைத் தரும் அறிவும் திட்டமிடலும் உடையவர்களா? என்றெல்லாம் யோசித்து முடிவு செய்யவேண்டியவர்கள். ஐந்தாண்டுக்கொருமுறை வரும் தேர்தல் ஊடகங்கள் முன்வைப்பது போல் பண்டமல்ல. தேர்தல் ஆணையம் நடத்துவதுபோலத் திருவிழா அல்ல. அரசியல்வாதிகள் அணுகுவதுபோல போட்டிகளும் அல்ல. வாக்காளர்களின் வாழ்வு அது. மக்களாட்சி என்னும் உயரிய அரசியல் தத்துவத்தில் அதுதான் உயிர். நம் உயிரை ஏழுகடல் தாண்டி, ஏழுமலைதாண்டி, ஏழு மரங்கள் கடந்து, ஒரு மரத்தின் பொந்தில் வைத்துப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தால் மட்டும் போதாது. அந்த அரிய உயிரின் மதிப்புணர்ந்து பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் திட்டமிடும் அரசு நிர்வாகத்தை உருவாக்கும் மதியாளர்களை, செயலாளிகளை, நம்பகத்தன்மை கொண்ட இயக்கத்தை, அந்த இயக்கத்தில் இருக்கும் மனிதர்களைக் கண்டறிந்து வாக்களிக்கவேண்டும். வாக்காளர்களின் பொறுப்பு அளவிடமுடியாது. பொறுப்பான அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்