கதையிலிருந்து நாடகம்: இமையத்தின் அணையும் நெருப்பை முன்வைத்து


இமையத்தின் அணையும் நெருப்பு கதையைப் பத்திரிகையில் வந்தபோதும், புத்தகத்தில் ஒன்றாக வந்தபிறகும் வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். அந்தக் குறிப்பு இதோ.
அணையும் நெருப்பு எழுப்பும் வினாக்கள் உலகப் பொதுவான ஒன்று. பாலியல் வேட்கையின் மீதான விசாரணையாக அமைந்துள்ள இந்தக் கதை எழுதப்பட்டுள்ள முறையே கவனிக்கத்தக்க ஒன்று. அக்கதையில் இடம் பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களில் ஒன்று ஒற்றைச் சொல்லைக் கூடப் பேசாமல் (ஆண்) கல்லைப் போல அசைவற்று அமர்ந்திருக்க, சந்தோஷம் பேசுகிறாள். பேசுகிறாள்.. பேசிக் கொண்டே இருக்கிறாள். அவளது பேச்சு- அவளின் கேள்விகள் அந்த இளைஞனிடம்  மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. பெண்களின் எந்தச் சூழலையும் கவனிக்காமல், தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் ஆண்களின் மீது வீசப்படும் தாக்குதல்கள் அவை.

நாடகத்தின் அடிப்படை அலகு உரையாடல். அதற்கே வாய்ப்பே இல்லாமல் ஒரே பாத்திரம் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு கதையைத் தேர்வு செய்து நாடகமாக மாற்றி மேடையேற்றுவது சவாலான ஒன்று. அந்தச் சவாலான வேலையைத் தேர்ந்த அரங்கியலாளர்கள் மட்டுமே மேற்கொள்வார்கள்.  புதுச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் இரா.ராஜுவும், அவரது மாணவர்களும் அந்தச் சவாலைச் சரியாகச் செய்திருந்தார்கள். மையப்பாத்திரமான சந்தோஷம் பேச்சும் பேச்சுகள் அனைத்தும் இமையத்தின் கதையில் இடம் பெற்றிருக்கும் பேச்சுகளே. அவள் இப்படியொரு பேச்சைத் தொடங்குவதற்கான தயாரிப்பாக உருவாக்கப்பட்ட சந்தை, பேருந்து, மீன்கடை போன்ற காட்சிரூபங்களும், அதில் இடம்பெறும் முகமற்ற பாத்திரங்களும் மட்டுமே இயக்குநரின் உருவாக்கம். இவைகளின் தொகுப்புதான் பார்வையாளர்களை ஒரு பெண்ணின் குரலை - பெண்களின் குரலாகக் கேட்கவும் பார்க்கவும் வைக்கிறது. இதுபோன்ற காட்சிரூபங்களை உருவாக்குவதில் நவீனநாடக நடிகர்கள் தேர்ந்தவர்கள். விரும்பிச் செய்வார்கள். விரும்பிச் செய்த நிகழ்வைத் தந்த மாணவர்களுக்கு   அந்தத்துறையின் முன்னால் ஆசிரியர் என்றவகையில் எனது வாழ்த்துகள்.
விருத்தாசலத்தில் நடக்கும் களம்புதிது கவிதைப் பரிசு விழாவில் மேடையேற்றுவதற்காகத் தயாரித்த அந்த நாடகத்தை அடுத்தடுத்த நாட்களில் இருவித அரங்குகளில் பார்க்கும்  வாய்ப்பு கிடைத்தது. முதலில் பார்த்தது ப்ரொசீனியம் அரங்கில், அடுத்தகாட்சி ஒரு பழைய ஓட்டுக்கூரையைப் பின்னணியாகக் கொண்ட வெட்டவெளி அரங்கில். இரண்டிலும் கிடைத்த அனுபவங்கள் வெவ்வேறானவை. நாடகப்பள்ளியில் குறைவான ஆனால் நாடகம் பார்க்கிறோம் என்ற தன்னுணர்வுகொண்ட பார்வையாளர்களோடு அமர்ந்து பார்த்தபோது இமையத்தின் கூர்மையான உரையாடல்கள் பார்வையாளர்களிடம் ஒருவிதக் கலகலப்பையும் ஆண்களின் மீதான கூர்மையான விமரிசனம் என்ற அளவில் சிரிப்பொலியையும் உண்டாக்கியது. சந்தோசமாக நடித்த அருணஸ்ரீயின் கணீரென்ற குரலில் வட்டாரமொழியின் ஒலிப்புச்சுத்தமும் சேர்ந்து விமரிசனத் தொனிகொண்ட நாடகமொன்றைப் பார்க்கும் உணர்வை முழுமையாகத்தந்தது. அந்த விமரிசனத்தொனி ஆண்களைக்  - குறிப்பாகப் பெண்களின் உடலை நாடியலையும் இளைஞர்களைக் - எச்சரித்து நல்வழிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.
இரண்டாவது நாள் விருத்தாசலத்தின் மக்கள் நிரம்பிய திறந்தவெளி அரங்கில் சந்தோசத்தின் பேச்சுகள் ஆவேசம் கொண்ட பெண்ணின் குரலாக மாறி இளைஞனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக விரட்டித்துரத்தும் ஒன்றாக மாறிவிட்டது. அந்தப் பழையவீடும், பின்னணியில் தெரிந்த மரங்களும் இணைந்து நிகழ்வை நடப்பியல் காட்சிகளாக மாற்றிக்கொண்டே இருந்தன. மெதுவாகத் தொடங்கி உச்சத்தை நோக்கி நகர்ந்த அருணாவின் குரல்கள் அந்த இளைஞனை எச்சரிப்பதற்குப் பதிலாகத் தனது எரிச்சலைக் கொட்டித்தீர்க்கும் ஆவேசமாக மாறி விரட்டியது. கவிதைகள் வாசிப்பவர்களுக்கேற்ப அர்த்தங்களைத் தருவதுபோல அரங்க நிகழ்வுகளும் பார்வையாளத்திரள் மற்றும் நிகழ்த்தப்பட அரங்கவெளி சார்ந்து அர்த்தங்களை உருவாக்கும் என்பதை யார் மறுக்க முடியும்.
அரங்கநிகழ்வுகளுக்குத் தேவை காட்சிரூபங்கள். நடனக்கலைஞர்கள் தங்களின் உடலை இயக்குவதற்குத் தேவையான ஆதாரத்தை இசையிலிருந்து பெற்றுக்கொண்டுக் காட்சிரூபங்களையும் உணர்ச்சிவெளிப்பாட்டையும் பெருக்கிக்காட்டுவார்கள். இசையையும் உடலின் இயக்கத்தையும் இணைக்கும் தேர்ச்சி பெற்றுச் செய்யும் அந்த வினையை  நாடக நடிகர்கள் பெற்றுக்கொள்வது உரையாடல் வழியாக. உரையாடல்களுக்குள் இருக்கும் மொழியின் ஒலியும் மௌனத்தையும் உள்வாங்கிக் கொண்ட நடிகர்கள் மேடையில் அசைகிறார்கள். அந்த அசைவுக்கான பின்னணிகளை ஒளியமைப்பும், அரங்க நிர்மாணமும் உருவாக்குகின்றன. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயக்குநர்களும் நடிகர்களும் கையில் கிடைக்கும் நாடகப்பிரதிகளைப் புதுப்புது அர்த்தங்களோடு மேடையேற்றுவதில் கவனம் செலுத்தும்போது நாடகக்கலை அதன் இருப்பை உறுதிசெய்யும்.
மேடை நிகழ்வுகளாக்கப்பட்ட இமையத்தின் கதைகள்
நாடகத்தின் அடிப்படை அலகு உரையாடல் என்று முன்பே சொன்னேன். இமையத்தின் நாவல்களும்சரி, சிறுகதைகளும்சரி உரையாடல்களால் நிகழ்வுகளையும் பாத்திரங்களின் மனத்தையும் முன்வைப்பவை. நாடக வடிவத்தையும், திரைக்கதை வடிவத்தையும் கொஞ்சம் கவனித்துக் கற்றுக் கொண்டாரென்றால் தேர்ந்த வசனகர்த்தாவாக வலம்வரும் வாய்ப்பு இமையத்திற்கு உண்டு. ஆனால் அவரது உரையாடல்கள் எப்போதும் கதைக்குள் வரும் பாத்திரங்களின் உரையாடல்களாக இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. உரையாடல்களால் உருவாகும் காட்சிகள் தருவது உணர்வும் கருத்தியல் முரணும். அக்காட்சிகளால் இணைக்கப்படுவது அங்கம். அங்கங்களால் கட்டமைக்கப்படுவது நாடகம். இப்படியான நல்திறக் கட்டமைப்புகொண்ட  நாடகங்களாக இமையத்தின் எந்தக் கதையும் இல்லை. ஆனால் ஓரங்க நாடகங்களுக்குள் இருக்கும் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற தன்மையைக் கொண்ட கதைகள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். இத்தன்மையின் ஆகச்சிறந்த கதை பெத்தவன். சமூகமுரணும் பாத்திரமுரணும் வெளிப்பட்ட அந்தக் கதையையும் இதே நாடகக்குழு அரங்கநிகழ்வாக்கி மேடையேற்றியிருக்கிறார்கள். அதிலும் மையக்கதாபாத்திரத்தில் நடித்தவர் இதே அருணாதான். தரும் பயிற்சியைப் பெற்றுக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக்கூடிய நடிகையாக அவரை நான் பார்த்திருக்கிறேன்.
இதே நாடகக்குழு இமையத்தின் ஆகாசவீரன் என்ற கதையையும் நாடகமாக ஆக்கியிருக்கிறது;அதே நடப்பியல்பாணி நடிப்போடும் காட்சி அமைப்போடும். அந்தக் கதை, அணையும் நெருப்பைப்போன்ற கட்டமைப்பும் சொல்முறையும் கொண்டதுதான். ஆனால் இங்கே பேசுவது ஒரு திருடன். அவன் பேசுவது கடவுளிடம். தனது குலசாமியான ஆகாசவீரனிடம் பேசும் திருடன், சாதாரண மொழியில் பேசினாலும், இந்த உலகம், அதில் இருக்கும் இயற்கைப்பொருட்கள், மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட வாழ்க்கை முறைகள், விதிகள், சட்டங்கள், நடைமுறைகள் என அனைத்தையும் கேட்கிறான். கேட்பது அவனது குலசாமியிடம். பதில் கிடைக்காது என்று தெரிந்தும் அதனோடு பேசும் இந்த அபத்தத்தை நடப்பியல் மொழியிலும் நடப்பியல் பாணி நாடக நடிப்பிலும் காட்சி உருவாக்கத்திலும் மேடையேற்றுவது எளிய முயற்சியாக இருக்கலாம். அதைவிடவும் அந்தக் கதை எழுப்பும் தத்துவ விசாரங்களை உள்வாங்கிக் கொண்டு சார்த்தரின் மீளமுடியுமாவைப்போலவோ, பெக்கெட்டின் கோடாவுக்குக் காத்திருத்தல் போலவோ நாடகப்பிரதியை உருவாக்கிக் கொண்டு மேடையேற்றியிருந்தால் சர்வதேச நாடகப்பிரதியாகவும் மேடையேற்றமாகவும் கருதத்தக்க ஒன்றாக மாறியிருக்கும்.
இரா.ராஜுவின் இயக்கத்தில் மேடையேறிய மூன்று நாடகங்கள் தவிர, கூத்துப்பட்டறையிலும் இமையத்தின் இரு சிறுகதைகள் மேடையேறியதாக அறிகிறேன். நிஜமும் பொய்யும், அம்மா என்ற அந்தச் சிறுகதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட அந்த மேடைநிகழ்வுகளை நான் பார்த்ததில்லை. இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களைக் கொண்டதாகவே தனது கதைகளை உருவாக்கும் இமையத்தின் அண்மைக்காலக் கதைகளுக்குள் ஓரங்க நாடகத்தின் காட்சிப் பிரிவுகள் இருக்கின்றன. அந்தக் கதை எப்படி முடியும் என்பதை ரகசியமுடிச்சாக மாற்றி நகர்த்துவதற்குத் தனது வலுவான உரையாடலைப் பயன்படுத்துபவர் இமையம். எனவே அந்த உரையாடலை அப்படியே வைத்துக்கொண்டு எளிமையான நாடகப்பிரதிகளை உருவாக்கி மேடையேற்ற விரும்புவர்கள் திரும்பத்திரும்ப இமையத்தின் கதைகளை வாசித்துப் பார்க்கலாம். ஆனால் குறியீடுகளால் நிரப்பப்படும் நவீன நாடகப்பிரதியை உருவாக்க நினைக்கும் ஒரு இயக்குநருக்கு இமையத்தின் சில கதைகளே உதவக்கூடியன. ஆகாசவீடு போல இன்னொரு கதையாக வேலை கதையைச் சொல்வேன்.  அந்தக் கதைகளை நாடகமாக்கும்போது கதாபாத்திரங்களின் பேச்சுமொழியை - உரையாடலை- அப்படியே பயன்படுத்த முடியாது. இதற்குப் பதிலாக இந்தியப் பாரம்பரிய சொல்முறை வழியாகக் கட்டியங்காரன் ஒருவனை உருவாக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரே நாடகமாக ஆக்கமுடியும். அதற்கான கதைகளும் இமையத்தின் தொகுப்புகளில் கிடைக்கின்றன.




கருத்துகள்

saru.manivillan இவ்வாறு கூறியுள்ளார்…
nice...nice...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்