மறக்கடித்தல் அதனினும் கொடிது.

நபர்களின் நடவடிக்கைகளை முன்வைத்து அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவது வெகுமக்கள் ஊடகங்களின் தந்திரம். ஊடகத் தந்திரங்களுக்குக் கேள்விகளற்றுப் பலியாகும் முதன்மை வர்க்கம் நடுத்தரவர்க்கம். எதையும் அறிவுபூர்வமாக விவாதிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம்.
படிப்படியான மாற்றம். புத்திசாலித்தனமான ஏற்பும் பொறுமையும் வெளிப்படுதல் என விவாதத்தைத் திசைதிருப்புதலில் இருக்கிறது ஊடகவெற்றி. 6: 4 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள சட்டசபையில் இயல்பாக எதிரும்புதிருமான விவாதங்களே நடக்கப்போகின்றன. செயல்திட்டங்களை முன்வைத்தல், தேவையான நிதித்தேவை, விளைவுகளால் கிடைக்கும் பலன்கள், அதனால் உண்டாகும் நன்மை தீமை எனப் பொருண்மைகூடிய விவாதங்களைச் செய்யும் அவையாகச் சட்டசபை இருந்ததில்லை. இந்தமுறை தேர்வுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அதற்கு மாறான கேலிகளுக்கும் வன்மத்துக்கும் பழக்கப்பட்டவர்கள். அவர்கள் நடத்தப்போகும் விவாதங்களின் அபத்தத்தைப் பேசவேண்டியது ஊடக விவாதங்களின் நிலையாக இருக்கவேண்டும். 
முதல் நாளின் அறிவிப்புகள் சாத்தியமா? சாத்தியமாக்கினால் உண்டாகப் போகும் விளைவுகள் என்ன? என்பதான விவாதங்கள் நடக்காது. அதிலிருந்து திசைமாறிச் சட்டசபையின் நகல்களாகவே இருக்கப்போகின்றன ஊடகவிவாதங்களும். சிலநேரங்களில் கூடுதல் வண்ணக்கலவையைப் பூசிக் கோலம் போடக்கூட விரும்பலாம்.

தேர்தல் அரசியல் என்னும் அங்கத நாடகத்தை ஒற்றை முரண்பாட்டுச் சிக்கலாக மட்டுமே முன்நிறுத்திப் பழகிவிட்ட ஊடகங்கள், தேர்தலுக்கு முன் ஜெயலலிதா x கருணாநிதி இடையேயான உச்சநிலையைக் கச்சிதமான உருவாக்கிக் காட்டின. வில்லனின் வீழ்ச்சியாக முடிந்தது தேர்தல் முடிவுகளென்னும் உச்சநிலைக்காட்சி. இந்த இருநிலை எதிர்வில் எப்போதும் வில்லன் யார் என்பது ஏற்கெனவே முடிவானது. இப்போது ஊடகவலைப் பின்னல்கள் உச்சநிலைக்குப் பிந்திய எதிர் உச்சநிலையை (Anticlimax)உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. வில்லனின் வீழ்ச்சிக்குப் பின் இன்னொரு நாயகனை உருவாக்க நினைப்பது இயல்பான உத்தி.
பதவி ஏற்புக்கு அழைப்பு x அழைப்பை ஏற்றுப் பங்கேற்பு. 10 ஆம் வரிசையில் இடம்x சிரித்தபடியே ரசித்தார் ஸ்டாலின்.மா றமாட்டார்; அது பிறவி(பிராமண)க்குணம் x மாறவிட மாட்டார்; இதுதான்( பிராமண எதிர்ப்பு) இவரது ஒரே கருவி என்று உச்சநிலைக்குப் பிந்திய எதிர் உச்சத்தைத் தீர்மானித்துவிட்டார்கள். இப்போதும் போட்டி மும்முனைப் போட்டிதான். இன்பியல் அல்லது துன்பியல் நாடகங்களுக்குத் தேவை முரணிலை எதிர்வுகள். அங்கதநாடகத்திற்குத் தேவை பல்முனை முரண்கள். ஒவ்வொரு முனையிலும் சிரிக்கலாம்;ரசிக்கலாம்; மறக்கலாம்.
மறத்தல் கொடிது; மறக்கடித்தல் அதனினும் கொடிது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்