எப்போதும் நின்றாடும் கள்வன்

2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டதால் மாற்ற முடியாது. ஒரு வாக்காளனாக வேட்பாளர்களையோ அவர்களது பிரதிநிதிகளாக உள்ளூர் பிரமுகர்களையோ சந்தித்திருக்க முடியாமல் போய்விட்டது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எப்படி  வாங்கினார்கள் என்பதும் தெரிந்திருக்கும். இந்தத்தேர்தலில் அந்த அனுபவம் கிடைக்கவில்லையென்றாலும் முந்திய அனுபவங்கள் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் விளையாண்டதைப் பார்த்திருக்கிறேன். பணத்திற்கும் வாக்களிப்பிற்குமிடையேயுள்ள உறவு அறச்சிக்கலும் தனிமனித விருப்பங்களும் இணைந்தவை.

திருநெல்வேலி-11, கட்டபொம்மன் நகர் என அஞ்சல் முகவரி இருந்தாலும், வீடிருப்பது கிராமப்புறத்தில். கட்டபொம்மன் நகரில் முக்கால்வாசி கீழநத்தம் பஞ்சாயத்துக்குள் இருக்கிறது. அந்தப் பஞ்சாயத்து நாங்குனேரி தொகுதிக்குள் வருகிறது. இடைவெளி  100 மீட்டர் தான்.  பாளையங்கோட்டை தொகுதிக்காரனாக மாறி நகரவாசி ஆகிவிடலாம்.   கீழநத்தம் பஞ்சாயத்தின் தலைவர் அஇஅதிமுகவைச் சேர்ந்தவர். அவரது செல்வாக்கால் மாநகராட்சிக்குள் சேர்க்கவிடாமல் தடுத்துவருகிறார் என்று சொல்வார்கள். அவரோடு 10 ஆண்டுகளாக நல்ல பழக்கம்.  ‘மூன்று நாட்களுக்கொருமுறை தண்ணீர்,  தொடர்ந்து எரியும் தெருவிளக்கு’ இரண்டும்தான் நாங்கள் உங்களிடம் வைக்கும் கோரிக்கை. முடிந்தால் இந்தச் சாலைகளைப் படிப்படியாகத் தார்ச்சாலையாகவோ, காங்கிரீட் சாலையாகவோ மாற்றிவிடுங்கள் என்று பல தடவை சொல்லிவிட்டேன். முடிச்சிருவோம் சார் என்பார். ஆனால் எதுவும் நடக்காது. ஒருமாத காலத்திற்குக் கூடத் தண்ணீர் வராமல் தவிப்பதுதான் நடக்கிறது. தெருவிளக்குகளில் மாட்டப்படும் பல்புகள் ஒருமாதத்தில் நின்றுபோகும்.  எங்கள் தெருவுக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் தப்பிக்கப் பார்ப்பார். பார்த்தால் கேட்பேன் என்பது அவருக்குத் தெரியும். கேட்கும்போது ஏற்கும்படியான காரணமொன்றைச் சொல்வார் என்றாலும் பொய் சொல்கிறோமே என்று குற்றவுணர்வு அவருக்குள் இருக்குமென நினைக்கிறேன்.

அவரது திறமையை 2014 நாடாளுமன்றத்தேர்தலின்போது கண்கூடாகப் பார்த்தேன். எங்கள் தெருவிலிருந்த 20 வீடுகளில் 12 வீடுகளுக்குப் பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை உறுதி செய்துகொண்டார். என்னிடம் ஓட்டும் கேட்கவில்லை; பணம் தரவேண்டும் என்றும் கருதவில்லை. 13 ஆண்டுகளில் 6 முறை தேர்தல் வந்துவிட்டது. இரண்டுமுறை அவரே வேட்பாளர். பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றிபெற்றவர். ஒருமுறைகூட தனக்கோ, தனது கட்சிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டதில்லை. என்னை எதிர்க்கட்சிக்காரர் என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறார் என்றும் சொல்லமுடியாது. ‘அவர் கேட்டுக்கொள்வதால் நான் வாக்களித்துவிடுவேன்’ என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஒருவர் சொல்வதால் யாருக்கும் வாக்களிக்கும் மனிதர் கிடையாது என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்.
என்னைப் பற்றி அவர் தெரிந்துகொண்டது எனது எழுத்தின் மூலமாக என்பதால், மிகுந்த மரியாதையோடு பேசுவார். 2008 முதல் 2010 வரை- மூன்று ஆண்டுக்காலம் தினமலர் நெல்லைப் பதிப்பின் செய்திமலரில் கட்டுரைத்தொடரொன்றை எழுதினேன். அதனைத் தொடர்ந்து வாசித்துவிட்டுச் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு கட்டுரை குறித்து விவாதிப்பார். நான் முன்வைக்கும் வாதத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலும் ஒரு அரசியல்வாதியாக நடைமுறைப் படுத்துவதிலிருக்கும் சிக்கல்களைச் சொல்லிவிடுவார்.  இவ்வளவு எழுதும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் வாக்களிக்கும்படி கேட்பதில் இருக்கும் சங்கடத்தை அறிந்தவர். பணம் தருவதாகச் சொன்னால் ஒருவேளை நம்மை மாட்டியும் விட்டுவிடுவார் என நினைத்திருக்கக்கூடும். இரண்டாவது தடவையாகப் பஞ்சாயத்துத் தலைவருக்கு நின்றபோது சொன்னார், ”நீங்களெல்லாம் மனச்சாட்சிப்படி ஓட்டுப் போடுவீங்கய்யா. ஒங்ககிட்டெ நான் ஓட்டுக் கேட்க மாட்டேன்; எல்லாருக்கும் தர்றமாதிரி கைச்செலவுக்குக் காசெல்லாம் தரவும் மாட்டேன்” என்றார். அந்த முறை அவருக்குத் தான் வாக்களித்தேன்.

தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் இப்படித்தான் பணப்பட்டுவாடாவைச் செய்கின்றன. கிராமம், தெரு என ஒவ்வொரு அலகிற்கும் நம்பகமான ஆட்களை வைத்திருக்கிறார்கள். அந்த அலகில் எந்தெந்தக் குடும்பம் எந்தக்கட்சியின் ஆதரவாளர்கள் என்பதைக் கச்சிதமாகக் கணக்கிட்டு வைத்துள்ளனர். சமமான அளவைவிடக் கூடுதலாக ஒரு கிராமத்தில்/ தெருவில் கிடைக்கும் வாக்கு உறுதியாகும் நிலையில் வெற்றி தோல்வியை நிச்சயித்துக் கொள்கிறார்கள். உறுதியான ஆதரவாளர்கள் இருக்கும் தெருவில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். தேர்தல் காலத்தில் உறுதியானவர்களுக்குத் தரும் பணப்பட்டுவாடாவில் கஞ்சத்தனம் காட்டுவதில்லை. நடுநிலைவாதிகள் போல இருப்பவர்களுக்குப் போடப்படும் தூண்டிலில் மட்டும்தான் நடுக்கம் இருக்கும். போட்ட பணத்திற்குப் பலன் கிடைக்காமல் போகும் என்றால் ஏன் தரவேண்டும்? என உறுதிசெய்து தராமல் விட்டுவிடுகிறார்கள். இந்த முறையைத் தான் ஊடகங்கள் கட்சியின் கட்டமைப்பு எனச் சொல்கிறார்கள். இந்தக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குப் பயன்படும் கருவிகள் தான் சாதி, மதம், மொழி போன்ற சரக்குகள். கட்டமைப்பை உருவாக்கிவிட்டு அதன் வழியாகத் தருவதற்கான பணமும் சேர்க்கவேண்டும். இதில் இப்போதும் முன்னணியில் இருப்பது அ இ அதிமுக. என்பதை நடந்து முடிந்த தேர்தல் உறுதிசெய்துள்ளது. இதையெல்லாம் செய்யாமல் இன்னொரு அணி தமிழ்நாட்டில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லை.
#######
மனச்சாட்சி குறுகுறுக்கப் பணம்பெற்றுக்கொண்டு வாக்களித்த அனுபவம் எனக்கும் உண்டு. பாண்டிச்சேரிக்குப் போன இரண்டாவது வருடம் அந்தத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த தொகை ஒருகிலோ கோழியின் விலை. ஒரு ஓட்டுக்கு அல்ல; இரண்டு ஓட்டுகளுக்கு. அதையும் நான் நேரில் வாங்கவில்லை. எனக்காக வாங்கிக் கோழியாகப் பட்டுவாடா செய்தவர் வீட்டின் உரிமையாளர்.

1989 இல் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியாற்றச் சென்றபோது முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரில் மாடிவீட்டில் குடியிருந்தேன். தரைதளத்தில் வீட்டின் சொந்தக்காரர். மீன் வாங்கும் நாளென்றால் அங்காளம்மன் நகரில் இருக்கும் மீன்சந்தையில் பெண்களே வாங்கிவந்துவிடுவார்கள். கோழிக்கறி என்றால் ஆண்களுக்கு வாய்ப்பு.  வீட்டின் உரிமையாளரின் ஸ்கூட்டரில் உட்கார்ந்து போய் அவர் வாங்கும் கோழிக்கறியையே வாங்கிவருவது வழக்கம். நான் வீட்டில் இல்லாத ஞாயிறுகளில் அவரே வாங்கிவந்து கொடுத்துவிட்டு என்னைப் பார்க்கும்போது பணம் வாங்கிக் கொள்வார். அவர் இல்லாத நாட்களில் நான் வாங்கித்தந்துவிட்டுப் பணம் வாங்கிக் கொள்வேன். அவருக்கும் எனக்குமிடையே நடக்கும் பரஸ்பரப் பேச்சே கோழிக்கறி பற்றியதாக இருக்கும்; இல்லையென்றால் தெருப்புழுதியும் எருமைமாடுகளும் வீட்டுக்குள் வரும் தொல்லை பற்றியதாக இருக்கும்

தேர்தல் நாளன்று முதல் ஆளாகப் போய் வாக்களித்துவிட்டு இரண்டு பைகளில் கோழிக்கறியோடு வந்திறங்கினார். ஒரு பை மேலே வந்தது. அவரது மகள் வந்து கொடுத்துவிட்டுப் போனார். பணத்தோடு கீழிறங்கியபடி,      “ என்ன சார்; இன்னக்கி ஞாயிற்றுக்கிழமை இல்லையே. தேர்தல் ஸ்பெசலா?” என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்தேன்.  “ ஆமா சார். ஸ்பெசலோ ஸ்பெசல். கோழிக்கறிக்குப் பணம் தரவேண்டாம் நீங்க” என்றார்.  ஏன் என்று கேட்டபோதுதான் தெரிந்தது எங்களுக்கும் சேர்த்து அவரிடமே பணத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் வேட்பாளர்கள். நேற்று இரவில் வந்தவர்கள் மாடி ஏறி வரச் சிரமப்பட்டு அவரிடமே கொடுத்திருக்கிறார்கள்.  அதொன்றும் பிரச்சினையில்லை. “நானே கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லி இவர் வாங்கிவிட்டார். நான் பணம் வாங்க மாட்டேன் என்று விவாதம் பண்ணி அவரது கோபத்தைச் சம்பாதித்தால், வேறு வீடு தேடவேண்டியதிருக்கும் என்பதால் மறுபேச்சு பேசாமல் கோழியை வாங்கிக் கொண்டு காசு தரவில்லை.

எந்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்தாங்க என்று கேட்டேன்.  ‘இரண்டு கட்சியிலும் - அங்கும் தி.மு.க., அ.தி.மு.க. தான் - கொடுத்தாங்க சார். வாங்கிக்கிட்டேன். வஞ்சகமில்லாம ஆளுக்கொரு ஓட்டுப் போட்டுடலாம் சார் அப்படிப் போட விரும்பலன்னா, நீங்க விரும்புற கட்சிக்குப் போட்டுக்கங்க. நம்மள யாரு கேட்கப்போறா. குடுக்கிற பணத்தெ வாங்கலன்னு வச்சுக்கோங்க. அப்புறம் அவன் நம்மளெ எதிரியாப் பார்ப்பான். நல்லது; கெட்டதுன்னு போய் நின்னா வல்லுன்னு விழுவானுங்க. அதான் சார் வாங்கிட்டேன்’ என்றொரு நியாயம் சொன்னார். அவர் வீட்டிலும் இரண்டு ஓட்டுதான். மொத்தம் நாலு ஓட்டு. அதன் விலை 2 கிலோ கோழிக்கறி. 1990 நிலவரம். கால் நூற்றாண்டுக்குக்குப் பின் ஓட்டின் விலை ஆயிரம் மடங்கு கூடியிருக்கு. இந்தத்தேர்தலில் 4 ஓட்டு இருந்து இரண்டு கட்சியிலும் வாங்கும் திறமை இருந்தால்  10 ஆயிரம் கிடைத்திருக்கும்.ப்ராய்லர் கோழி விலையென்னவோ பெரிதாக உயரவில்லைதான். இந்தியாவில் இருக்கும் பணப்புழக்கத்தைத் தேர்தல் காலத்தைக் கொண்டு கணக்கிட்டால் பணவீக்கம் புரியவரலாம்.
#######
எனக்கு வாக்களிக்கும் வயது வராதபோதே தேர்தலில் பணம் புழங்குகிறது என்பது தெரியும். 1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த ஊராட்சித்தேர்தலில் மொத்தமாகப் பணம் கொடுக்கும் முறையை அறிமுகம் ஆனது.  எங்கள் ஊரில் பெருமழை பெய்த இரவொன்றின் நிலா வெளிச்சத்தில் வானம் தோண்டப்பட்ட மாரியம்மன் கோயில் இரண்டாண்டுகளுக்குப் பின்னும் கட்டை மட்டத்தில் நின்றது. மூன்று மாதத்திற்கொருமுறை தலைக்கட்டுவரி போட்டு வசூல்செய்து கோயிலைக் கட்டி முடிப்பது என்பது திட்டம். ஒருவருடத்திற்குப் பிறகு மழையும் பெய்யவில்லை; கோயிலும் உயரவில்லை. பெரும்பஞ்சம் வந்தது. கிணறுகள் தூர்வாரப்பட்டன. என்றாலும் பயிர்கள் கருகிப்போவதைத் தடுக்கமுடியவில்லை. அந்த நேரத்தில் தான் உள்ளாட்சித்தேர்தல் வந்தது. கட்சிச் சின்னமெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லையென்றாலும் நின்றவர்களுக்குக் கட்சி அடையாளம் இருக்கவே செய்தது. ஏற்கெனவே தலைவராக இருந்த காங்கிரஸ்காரர் மூன்றாவது முறையாகத் திரும்பவும் நின்றார். புதிதாக இளம்வயதுக்காரர் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அவருக்குத் திமுக வின் அடையாளம்.  அத்தோடு சாதி அடையாளத்தையும் முன்வைத்தார். இரண்டு தடவை நின்ற பிள்ளைவாளுக்கேவா எழுதிவச்சிருக்கு பஞ்சாயத்துத் தலைவர் பதவி என்று கேட்கப்பட்டது.  அவரது அந்தப் பஞ்சாயத்திலிருந்த அவரது சாதிக்காரர்களையெல்லாம் ஒருங்கிணைத்து விட்டார். இன்னும் இரண்டு சாதிகளை வளைத்துப் போட பணத்தாசை காட்டப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனியாகப் பணம் கொடுக்கக் கூடாது; சமூகமாக இணைந்து வந்தால் பணம் கொடுத்துவிடலாம் என்பது கணக்கு. எங்கள் ஊரில் அவரது சமூகத்தினர் கோயில் கட்டுவதற்குத் தரவேண்டிய தலைக்கட்டுவரியைக் கணக்கிட்டு மொத்தமாகக் கொடுத்துவிட்டு, அதே மாரியம்மன் கோயிலில் வைத்துப் பெரியவர் ஒருவரிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். பெரியவரின் சத்தியம் பிசகக் கூடாதென்று அவரது சாதிக்காரர்கள் ஒவ்வொருவரும் அவர் சொன்னவருக்கே வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். பணம் தரக்கூடாது; இது சேவையென்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர் அந்தத் தேர்தலில் தோற்றுப்போனார்.

அன்று ஆரம்பித்த பிளவின் வெடிப்பு 50 ஆண்டுகள் வரை நீண்டு இப்போது அந்தச் சிறிய கிராமத்தில் இரண்டு மாரியம்மன் கோயில்களாக நிற்கின்றன. புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோயிலுக்கு என்னுடைய சாதிக்காரர்கள் செய்த வசூலில் எனது பெயரையும் எழுதிக் கொண்டார்கள். எனது ஊர் இருக்கும் அந்தப் பஞ்சாயத்து இந்திய அளவில் புகழ்பெற்ற உத்தப்புரம் பஞ்சாயத்துதான். அந்தத் தேர்தலில் உருவான சாதிப்பிளவுதான் பெருஞ்சுவராக வளர்ந்து அவமானச் சின்னமாக நிற்கிறது.  
#######
தேர்தல் பற்றிய நினைவுப்படகில் ஏறிப் பின்னோக்கிப் போனால் பஞ்சாயத்துத் தேர்தலைவிடச் சட்டமன்றத் தேர்தல்களில் பணவிளையாட்டுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.   எங்கள் ஊர் இருக்கும் சட்டமன்றத் தொகுதி வரலாற்றுச் சிறப்பு கொண்ட தொகுதி. இரண்டுபேர் தங்கள் பெயரோடு இணைத்துக்கொண்ட ஊரின் பெயரால் ஆன தொகுதி. எம்.ஜி.ஆருக்கும் முன்பே ஒரு நடிகரை உறுப்பினராக்கி அனுப்பிய தொகுதி அது. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆரின் பெயரில் இருக்கும் இரண்டு ‘எஸ்’களில் ஒன்று சேடபட்டியைக் குறிக்கும். அவரது சொந்த ஊர் அதுதான். அவரது தோட்டம் ஒன்று ஊரடியில் இருந்தது. எஸ்.எஸ். ஆர் தோட்டம் என்ற பலகைகூடத் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஒருமுறைகூட அவரைச் சேடபட்டியிலோ, அவரது தோட்டத்திலோ பார்த்ததில்லை. 1991 முதல் 1996 வரை தமிழகச் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த இரா.முத்தையாவின் பெயரும் சேடபட்டியோடு இணைந்தே அறியப்பட்ட பெயர்தான். நான்குமுறை தொடர்ந்து அந்தத்தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சேடபட்டிச் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய பாராளுமன்றத்தொகுதியான பெரியகுளத்தில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டு வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராகக்கூட இருந்தார். டெல்லியில் நடந்த ஆசைகாட்டலில் வழிதப்பிய ஆடாக மாறி மேய்ப்பரிடமிருந்து வழி தப்பினார். அ இ அதிமுகவின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் என்ன காரணமென வெளியே சொல்லாமல் வெளியேற்றப்பட்டு இப்போது திமுகவில் இருக்கிறார். இப்போது அந்தத் தொகுதியை -சேடபட்டித் தொகுதியை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

சேடபட்டி முத்தையாவுக்காக எங்கள் கிராமம் மொத்தமும் இரண்டுமுறை ஓட்டுப் போட்டது. முதல்தடவை குடிதண்ணீர்க் கிணற்றை ஆழப்படுத்தப் பணம் கொடுத்தார். இரண்டாவது தடவை ஊரிலிருந்த சாவடிகளுக்குச் சிமெண்ட் தளம்போட்டுவிட்டார். பஞ்சத்தால் ஊரைவிட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த 50 -க்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் பணம் கொடுப்பதாக அவருக்காக வேலைபார்த்தவர்கள் சொன்னார்கள். அவரது பணத்தில் சென்னையிலிருந்து வந்து சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பவும் கட்டட வேலை செய்யச் சென்னைக்கே திரும்பினார்கள் எங்கள் உறவினர்களில் பலர்.

அவரது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் தான் ஊருக்குப் பால்பண்ணை கொண்டு வந்தார். பால் மாடுகள் வந்தபோது வீட்டுக்கொருமாடு மானியத்தில் கிடைத்தது. பள்ளிக்கூடமே இல்லாமல் இருந்த ஊருக்குப் பள்ளிக்கூடம் வர அவர்தான் காரணம் என்று சொல்லி மூன்றாவது முறை வாக்குப் போட்டார்கள். எதிர்த்து நிற்பவர்கள் எங்கள் ஊருக்கு என்ன செய்வார்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் தொகுதிக்கு என்ன செய்வோம் என்று பேசினார்கள். சிறுநகரமான எழுமலையிருக்கும் உயர்நிலைப்பள்ளியின் தரம் உயர்த்தப்படும்; உசிலம்பட்டி - கல்லுப்பட்டி சாலை அகலப்படுத்தப்படும் என்று தி.மு.க. வேட்பாளர்  சொன்னதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அந்தச் சாலையில் செல்லும் பேருந்தில் நாமும் பயணம் செய்வோம் என்பதும், அந்த உயர்நிலைப்பள்ளியில் நமது ஊர்ப்பிள்ளைகளும் படிக்கின்றன என்பதும் அவர்களுக்குப் புரியாத ஒன்று. நமது ஊருக்கு; எனது குடும்பத்துக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே வாக்களிக்கும் முடிவை எடுக்கவைக்கிறது. அவருக்கு மூன்றாவது முறை கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. அவர் தந்த பணத்தை உள்ளூர்ப் பிரமுகர் அமுக்கிவிட்டாரென்றார்கள்.  ஆனாலும் வெற்றி கிடைத்தது.

தொடர்ந்து வெற்றிபெற்றார். ஒவ்வொரு ஊரிலும் அவரை அண்ணன் என்று சொல்லிக் கூப்பிடும் தம்பிகள் இருந்தார்கள். அந்தத் தம்பிகளில் சாதி வேறுபாடுகள் எல்லாம் இல்லாமல்தான் இருந்தது.  அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு வருவார். அல்லது அதற்கான செலவில் ஒரு தொகையத் தருவார். கட்சிக்காரர்களுக்குத் தரும் பணம் ஓட்டாக மாறும் என்பது கணக்கு. கடந்த கால் நூற்றாண்டாக எங்கள் கிராமம் எப்படி வாக்களிக்கிறதென்று எனக்குத் தெரியாது. நான் நகரவாசியாகிவிட்டேன். பாண்டிச்சேரிக்கு போய், திருநெல்வேலி வந்துவிட்டதால், எனது ஓட்டு அட்டைகள் ஊரில் இல்லை. நகரத்திலேயே பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும்போது, ஒருநாள் கூலிகொடுத்தால் போதும் வாக்கைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கும் கிராமத்து மக்கள் பணம் வாங்காமல் வாக்களிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்