இலக்கியமும் வாசிப்பும் ஏற்பும்.

‘கவிதைகள் எப்போதும் விற்பனைக்கல்ல;அவரவர் மனத்திருப்திக்கு மட்டும் உரியது’ என்றே தோன்றுகிறது. எப்போதும் கவிதைகள் அச்சிடப்பெற்று வெளியீடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. முகநூலில் பகிரப்படும் வெளியீட்டு விழா அழைப்பிதழ்கள் வழியாகவே ஒவ்வொரு வாரமும் பத்துக்குக் குறையாமல் கவிதை நூல்கள் வெளிவருவதாக அறியமுடிகிறது. அதே நேரம் நூலகங்களுக்கு நூல்கள் எடுக்கும் நூலக ஆணைக்குழு கவிதைகள் வாங்குவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற தகவலும் இருக்கிறது.

அதே நேரம் அறியப்பட்ட கவிகளின் பெருந்தொகுப்புகளும் புதுத் தொகுப்புகளும் புத்தகச்சந்தைகளில் விற்பனையாகின்றன என்பதும் உண்மைதான். மனுஷ்யபுத்திரன் ஒவ்வொரு புத்தகச் சந்தைக்கும் இடையில் சில ஆயிரம் கவிதைகளை எழுதிப் பல தொகுப்புகளாகவும் ஒற்றைத் தொகுப்பாகவும் வெளியிட்டுப் பெரும்போக்கைத் தீர்மானிக்கும் போட்டியில் இருக்கிறார். கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எழுத்து மூலமாகவே பெரும்பணம் சம்பாதிக்கிறார்கள். அவர் எழுதும் திரைப்படப் பாடல்களுக்காக மட்டுமே பணம் கிடைக்கின்றன என்று சொல்லமுடியாது. அவரது தொடக்க காலத் தொகுப்பு முதல் இப்போது எழுதும் உணர்ச்சிக் கவிதைகளும் உரைநடைப் புனைவுகளும் விற்பனையில் பெரும் தொகையைப் பெற்றுத் தருகின்றன. சமகாலப் புனைகதைகளின் தன்மைகள் இல்லையென்ற போதிலும் அவரது புனைகதைகளும் பெரும் வியாபாரத்திற்குரிய பிரதிகளாக இருக்கின்றன. ஒரு தனிமனிதனுக்குத் தேவையான ஆடம்பர வாழ்க்கையனைத்தையும் வைரமுத்துவுக்கு வழங்கியது எழுத்துதான். இதை யாரும் மறுக்கமுடியாது. அவரைப் பின்தொடர்ந்து நிற்கும் பா.விஜய், சிநேகன் போன்றவர்களின் சொற்களைக் கவிதைகள் என்றே தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்; வாங்குகிறார்கள்.

எழுத்தை மட்டும் நம்பி ஒரு எழுத்தாளன் தமிழ்நாட்டில் வாழ முடியாது என்ற சொல்லாடல் பொய் என்பதை நிரூபிக்கப் பல உதாரணங்கள் நிகழ்காலத்தில் உள்ளன. கல்கியின் வம்சாவளியினர் அவரது எழுத்துகளை விற்றே இப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். இப்போதும் அகிலனின் எழுத்துகள் விற்கின்றன; சாண்டில்யன், சுஜாதா, மு.கருணாநிதி, மு.வரதராஜன் ஆகியோரின் புனைவுகளைப் படிப்பதற்கும் வாங்குவதற்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் காத்திருக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்று கணக்குக் காட்டுவதற்காக, 60-வது மணி விழாவின்போது 60 நூல்களை வெளியிட்டுள்ளேன் எனப் பட்டியல் போட்டுக்காட்டிய பேராசிரியர்களின் இன்றைய தேதியில் கால்நூற்றாண்டாக இருக்கும். அவர்களின் நூல்கள் தமிழ்நாட்டில் விற்கவே செய்கின்றன. விற்றுச் சாதனைசெய்த நூலின் பெயரால் தான் கட்டிய வீட்டிற்குப் பெயர் வைத்த பேராசிரியர்கள் உண்டு. தனது நாவல், சிறுகதைகளைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக்கியதன் மூலம், கல்யாணத்திற்குக் காத்திருந்த மகளைச் சீர்செனத்தியோடு திருமணம் செய்து வைத்த தமிழ் நாவல் ஆசிரியரையும் அடையாளம் காட்ட முடியும். அதே நம்பிக்கையில் பேராசிரியர்களைக் ‘கண்டுபேசி’ காரியம் சாதிக்கும் புனைகதை ஆசிரியர்களின் பட்டியலும் இருக்கிறது. கல்வித்துறை ஆய்வுகள் கவனிக்கத் தக்கன அல்ல என்று சொல்லிக்கொண்டே, ஊடகங்களின் பேட்டியில் என்னுடைய படைப்புகளை இத்தனை பேர் முனைவர் பட்டத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இத்தனைபேர் எம்பில் பட்டத்திற்கு ஆய்வு செய்கிறார்கள்; இந்த இந்தப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது எனச் சொல்லிப் பெருமை பாராட்டிக்கொள்வதும் எழுத்தாளர்கள் தான்.

உலகமொழிகளில் நவீனத்துவத்திற்குப் பின்னான இலக்கியப்போக்குகள் என அடையாளப்படுத்தப்படும் இலக்கியங்கள் தமிழில் எழுதப்படுகின்றன; அச்சிடப்படுகின்றன; ஆனால் கவனம் பெறவில்லையே என்ற கேள்வி தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்வி. என்றாலும் ஒவ்வொரு புத்தகச் சந்தைக்கும் சாரு நிவேதிதாவின் எழுத்துகள் நூலாக்கம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தனது வாழ்க்கைத் தேவைக்காகத் திரைப்படத்தொழிலோடு இணைந்து வேலை செய்துகொண்டு, தீவிர இலக்கியமும் செய்கிறோம் என்று காட்டவே செய்கிறார்கள். கோணங்கி தனது சுருள் எழுத்துகளால் அவரது வாசகர்களுக்காகப் படைப்பைத் தந்துகொண்டுதான் இருக்கிறார். இவர்களை அடுத்துவரும் தலைமுறையினரும் ஆண்டுக்கொன்றிரண்டு நூல்களை வெளியிடவே செய்கிறார்கள். அவற்றை அச்சிட்டு விற்பனை செய்யும் பதிப்பாளர்கள் ஒன்றும் வறுமையில் வாடிக் காணாமல் போய் விடவில்லை. நவீன எழுத்து என அறியப்படும் எழுத்துகளை அச்சிட்டு விற்கும் பதிப்பக உரிமையாளர்கள் குறைந்தபட்சம் கார், குளிரூட்டப்பட்ட அறைகளில் அலுவலகம், அதன் வழியாகக் கிடைக்கும் அதிகாரம் எனப் பவனி வரவே செய்கின்றனர்.
 
இவையெல்லாமே எழுத்து -வாசகன் - நுகர்வோன் என்ற மும்முனைகளும் பிரிந்து கிடப்பதாக நம்பும் அதேநேரத்தில் எங்கோ சந்தித்துக்கொள்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுகளும் தான். சமகாலத் தமிழ் இலக்கியங்கள் கவனிக்கப்படவில்லை; அங்கீகரிக்கப்படவில்லை; வாங்குவார் இல்லை என்ற அங்கலாய்ப்புகள் கிளம்பும்போதெல்லாம், இவற்றைச் சந்திக்கவைக்கும் புள்ளிகளைக் கண்டறியும் முனைப்புகளை யார் செய்வது என்ற தவிப்பும் தோன்றும். பரந்த தளத்தில் வாசிப்பு என்பது தமிழில் இருக்கவே செய்கிறது? ஆனால் வெகுமக்கள் வாசிப்பின் போக்கு எப்போதும் கால் அல்லது அரைநூற்றாண்டுப் பின் தங்கியிருப்பதன் காரணங்கள் என்னவாக இருக்கும்? என்ற விடைதெரியாத கேள்வியும் கூடவே வந்து மோதிப்பார்த்துக் கலைத்துப் போட்டுவிடும்.

தொல்காப்பியம், தண்டியலங்காரம் என இலக்கியவியல் அடிப்படையைக் கற்றுத் தேர்ந்ததாக நம்பும் இலக்கியத்துறை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமே சமகால இலக்கியத்தின் இயல்புகள் என்ன? எவை கவனிக்கப்பட வேண்டியவை; விவாதிக்கவேண்டியவை; முன்னெடுக்க வேண்டியவை என்ற தீர்க்கமான முடிவு இல்லையே என்ற அடுத்துத் தோன்றி அலைக்கழிக்கும். கொண்டாடப்படவேண்டிய எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள், அவர்களின் வாசகர்கள் அல்லது நுகர்வோர், அவ்விருவகைப்பாட்டிற்குமிடையே தொடர்பை எற்படுத்தித் தரவேண்டிய இடத்தில் இருக்கும் வியாபாரிகள் இதைத் தீர்ப்பதற்கு எதுவும் செய்ய வேண்டாமா? இவற்றோடெல்லாம் தொடர்பு கொண்டவைகளாக இயங்கும் வெகுமக்கள் ஊடகங்களுக்குப் பொறுப்பே இல்லையா? வெகுமக்கள் பரப்பிற்கு இவற்றைக் கொடுத்தால் போதுமென இயங்கும் வெகுமக்கள் ஊடகங்களுக்கும் அவற்றில் இயங்கும் எழுத்தை மூலதனமாகக் கொண்ட ஊடகர்களுக்கும் குற்றவுணர்வு தோன்றாதா? அரசியல் கட்டமைப்பால் தீர்மானிக்கப்படும் கல்விப்புலப் பாடத்திட்டங்களின் போதாமையை உணரச்செய்வது எப்படி? எல்லாவகைச் சீரழிவுக்கும் காரணங்கள் அரசியல் தளத்தில் இருக்கின்றன என்றுசொல்லி ஒதுங்கிக் கொள்ளலாமா?

இப்படியான கேள்விகளையெல்லாம் எழுப்பும் மனம், இலக்கியத்தைத் தேசவுடமையாக்கும் திட்டத்தைக்கூட யோசிக்கும். அதை முன்வைத்துப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள் கூட நடத்தலாமே என்றொரு செயல்திட்டத்தை முன்மொழிவதும் உண்டு. ஆனால் தேசவுடைமையாக்குதல் அல்லது 100 சதவீத நிதிநல்கை என்பது கலை இலக்கியத்தை வளர்த்தெடுக்குமா? என்ற கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். முழுமையும் அரசு ஆதரவோடு இயங்கிய சோசலிச நாட்டுக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் சொந்த நாட்டைவிட்டு வேறுநாடுகளுக்குத் தப்பியோடியதன் காரணங்களைத் தெரிந்து கொண்டால் இந்த யோசனைகளையும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதிருக்கும். அந்நிய தேசத்து உதாரணங்களை விட்டுவிடலாம். தமிழ்நாட்டு உதாரணங்களை முன்வைத்தே பேசலாம்.

இயல், இசை, நாடகம் என்ற மூன்றில் இயலும் இசையும் அவைகளுக்கான வாசகர்கள் மற்றும் நுகர்வோரை நம்பியே இயங்கிவருகின்றன. கவிதையோ, கதையோ அவற்றை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் பதிப்பகங்களின் தேவைகளுக்காகவே எழுதப்பட்டன. பதிப்பிக்கப்பட்டன. அவற்றை வாங்கிப் படித்த வாசகர்கள் தந்த பணம் முறைப்படியான பங்குத்தொகையாக/ ராயல்டியாக எழுத்தாளனைச் சென்றுசேரும் முறைமையொன்று உருவாக வில்லை என்பது கண்கூடான உண்மை. பெயர்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளை அச்சிட்டு வெளியிட்ட பதிப்பகத்தாரே அவர்களை வஞ்சித்தார்கள்/ சுரண்டினார்கள் என்பதும் வரலாறு. இப்போதும் தொடர்கிறது. இந்தப் பின்னணியிலேயே விற்பனையாகும் எழுத்துகளைப் பதிப்பிக்க எழுத்தாளர்களே தங்களின் உறவினர்களைக் கொண்டு பதிப்பகங்களை நடத்தினார்கள் என்பதும் வரலாறு மற்றும் நிகழ்கால உண்மைகள். விதிவிலக்குகள் எப்போதும் எதிலும் உண்டு. ஜெயகாந்தன் ஒரு விதிவிலக்கு. சுஜாதாவை விதிவிலக்காகச் சொல்லலாமா? என்று தெரியவில்லை. இசைக்கலையை நுகர சபாக்களின் உறுப்பினர்கள் எப்போதும் தயாராக இருந்தார்கள். இப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அது கர்நாடக சங்கீதமாக இருந்தாலும்சரி, திரைப்பட இசையாக இருந்தாலும்சரி கலைஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; அழைக்கப் படுகிறார்கள்; சன்மானங்கள் கிடைக்கின்றன.

நாடகக்கலையை இப்படிச் சொல்லமுடியவில்லை. நான் நாடகக்கலையோடு 20 ஆண்டுகள் தொடர்பில் இருந்தவன் என்ற நிலையில் “ நாடகக்கலை தமிழில் மற்ற கலைகளைப் போல வளராமல் போனதற்குக்காரணமென்ன?” என்ற கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். அந்தக் கேள்விக்கு நான் உண்டாக்கி வைத்திருக்கும் பதில், ‘நாடகம் அதன் பார்வையாளர்களை நம்பாமல், நிதிநல்கையாளர்களை மட்டுமே நம்பியதன் விளைவு’ என்பதுதான். 19 ஆம் நூற்றாண்டுவரை வடமாவட்டங்களில் தெருக்கூத்தாகவும் தென் மாவட்டங்களில் ஸ்பெஷல் நாடகங்களாகவும் அறியப்பட்ட தமிழ் அரங்கக்கலையை வாழவைத்தவர்கள் அதன் பார்வையாளர்களே. கோயில் விழாக்களின் நிகழ்வாக இருந்த இந்தக் கூத்துகளும் நாடகங்களும் மக்களின் வரிப்பணத்தில் ஒரு பங்கை நம்பியே இயங்கிவந்தன. சித்திரை தொடங்கி ஆவணி வரையிலான கொடை விழாக்களின்போது ஒவ்வொரு நாடகக் குழுவும், நாடகக்குழுவின் நடிகனும் அந்த ஆண்டுக்குத்தேவையான வருமானத்தைப் பெறும் அளவுக்கு நாடகமேடையேற்றங்கள் மூலம் வருமானம் பெற்றிருக்கிறார்கள். அந்தக் காலம் முடிந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான பயிற்சிகளிலும் ஒத்திகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், டி.கே.சண்முகம் போன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தரும் நூல்கள் சொல்லும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றன.
 
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாடகக்கலை முழுமையும் 100 சதவீத நிதிநல்கைக் கட்டமைப்புக்குள் நகர்ந்தது. அக்கட்டமைப்பு இரண்டு தன்மை கொண்டது. ஒன்று இயக்கம் சார்ந்த கட்டமைப்பு; இன்னொன்று சபா நாடகக் கட்டமைப்பு. இவ்விரண்டுமே நாடகக்கலை, அதன் பார்வையாளர்களைச் சார்ந்திருந்த நிலையை மாற்றின. திராவிட இயக்கங்கள் - திராவிட முன்னேற்றக் கழகம் நாடகக்கலையைத் தனது அரசியல் செயல்பாட்டிற்கான வடிவமாக மாற்றியபோது ஒருவிதத்தில் நாடகக்கலையைப் புத்தாக்கம் செய்தது எவ்வளவு உண்மையோ, அதற்கீடாக அது பார்வையாளர் களிடமிருந்து நாடகக்கலையைப் பிரித்து புரவலர்களைச் சார்ந்ததாக மாற்றியது. 

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னோடித் தலைவர்களான சி.என். அண்ணாதுரை, மு.கருணாந்தி, தென்னரசு, எம்.ஆர். ராதா போன்றவர்களும் அதில் செயல்பட்ட நடிகர்களான எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களும் நாடகக்குழுக்களை நடத்தினர். அக்குழுக்களின் வழி அவர்கள் போட்ட நாடகங்கள் எல்லாம் அரசியல் நாடகங்கள். அரசியல் தேவைக்காக தயாரிக்கப்பட்ட அந்நாடகங்கள் அனைத்தும் அவ்வியக்கங்களின் அரசியல் வெளிப்பாட்டைக்கொண்டிருந்த உள்ளடக்கங்கள். ஆக அவற்றின் புரவலர்களாக இருந்தவை அரசியல் இயக்கங்களே. அரசியல் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேடையேற்றப்பட்ட நாடகங்களுக்குரிய கட்டணம் நாடகத்திற்கான கட்டணமாக வசூலிக்கப்படாமல், கட்சி நிதியாகவோ, தேர்தல் நிதியாகவோ வசூலிக்கப்பட்டன. பார்வையாளர்கள் ஒரு கலையை அனுபவிப்பதற்கான விலையைத் தருகிறோம் என்ற உணர்வில் தந்ததல்ல அந்தத் தொகைகள். திராவிட முன்னேற்றக்கழகம் அதன் இலக்கான அரசதிகாரத்தைக் கைப்பற்றியபின் நாடகக்கலையின் புரவலராக இருந்த பொறுப்பைக் கைகழுவிக்கொண்டது. செவ்வகவடிவ நாடக மேடையில் சமுதாய உணர்வுகளை ஊட்டிய நாடக எழுத்துகளும் வரவில்லை; நாடக அரங்கேற்றங்களும் நடக்கவில்லை.

திராவிட இயக்கச் செயல்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர் கொள்ளவிரும்பிய நடுத்தரவர்க்கப் பிராமணர்களின் நிதிநல்கையில் உருவானவையே சபா நாடகங்கள். தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சென்னை சபாக்களில் நாடகங்களை நிகழ்த்தியவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டால் நான் சொல்வது புரியும். ஒருபுறம் தமிழ் இசைக்கெதிரான மனோபாவத்தோடு கர்நாடக சங்கீதத்தின் ஆதரவுக்கூட்டமாக விளங்கிய சபா உறுப்பினர்கள், முழுமையான நகைச்சுவை நாடகங்களை ரசித்தார்கள். அந்நாடகங்கள், துணுக்குத் தோரணங்கள் எனச் சொல்லப்பட்டாலும் அனைத்தும் சென்னை வாழ் பிராமணக்குடும்பங்களின் இயலாமையையும் விலகல் மனப்பான்மையையும் பழைமை பாராட்டும் மனப்போக்கைப் பகடி செய்வதுமான உள்ளடக்கங்களைக் கொண்டவை. அவற்றை ஆதரிப்பதைச் சமூகக் கடமையாகக் கருதியவர்கள் அவர்கள். ஒரு கட்டத்தில் இச்சபாக்களுக்கான புரவலர்நிலையை/ சபா உறுப்பினர் நிலையை ஒதுக்கி விட்டுத் தமிழ்ச்சினிமாவின் பார்வையாளர்களாக அவர்கள் மாறிப்போனார்கள். அப்படி மாறியபோது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்து இறங்கி எம்.ஜி.ராமச்சந்திரனின் தலைமையில் அ.இ. அதிமுக ஆட்சியைப் பிடித்திருந்தது என்பது சுவையான வரலாறு. அந்த வரலாற்று நிகழ்வோடு, சபா நாடகங்களும் காணாமல் போய்விட்டன.

சபாநாடகங்களும் திராவிட இயக்க நாடகங்களும் ஒருவிதத்தில் பார்வையாளர்களின் நுகர்வில் ஓரளவு பங்குத் தொகையைப்பெற்றன. ஆனால், இவற்றை நிராகரிப்பதாகச் சொல்லிக்கொண்டு வந்த நவீன நாடக இயக்கங்கள் முழுமையும் பார்வையாளர்களிடமிருந்து விலகிய தன்மையைக் கொண்டிருந்தன. அவற்றின் உள்ளடக்கங்களால் மட்டுமல்லாமல் , நுகர்தலின் தொடர்பு நிலையையும் அறுத்துக்கொண்டவைகளாக இருந்தன. அதனை அறிந்து மாற்றங்கள் நிகழ்ந்துவிடாமல் செய்ததில் அரசின் நிதிநல்கைகளும் பவுண்டேசன்களின் உதவிகளும் பங்காற்றின. தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒவ்வொரு நாடகக்குழுவும் மைய அரசின் சங்கீத நாடக அகாடெமியின் நிதியைப் பெறுவதில் முனைப்புக்காட்டின. அது நடத்தும் மண்டல , தேசிய நாடகவிழாக்களில் மொழி தெரியாத பார்வையாளர்களுக்குக் காட்சி மொழிமூலம் களிப்பூட்ட முயன்றன என்பதையும் நானறிவேன். முன்னோடிக் குழுக்கள் தொய்வடைந்த நிலையில் ஒன்றிரண்டு இளம் இயக்குநர்கள் 100 சதவீத நிதிநல்கையில் நாடகங்களைத் தயாரித்து ஆண்டொன்றில் நான்கைந்து மேடைநிகழ்வுகளை நடத்திவிட்டுப் பரிசும் பாராட்டும் கவனிப்பும் பெற்று வருகின்றனர்.

கலைகள், அவை எழுத்தோ, இசையோ, நாடகமோ புரவலர்களால் ரட்சிக்கப்படும் இடத்தில் இருக்கவேண்டுமா? என்பதைப் பற்றித் திரும்பவும் பேசவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்