தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

ஒரு கதை
=======
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி
என்னும்
மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர்அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்  அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.

காந்தியார்
, பெயராக மட்டுமல்ல; உருவமாகவும் நினைவில் இருக்கின்றார். எனது தொடக்கப்பள்ளிக்காக ஓடைமணலில் நடந்து தாழங்குளம் வழியாக முக்கால் மைல்தூரம் உத்தப்புரத்திற்கு நடந்துபோகவேண்டும்குளித்துவிட்டுச் சட்டை போடாமல் கதர்த்துண்டை இரண்டாக மடித்துக் கட்டிக்கொண்டு அவரது தோட்டத்திலிருந்து நடந்து வருவார்பின்னால் நடந்துவந்து என்னைத் தாண்டிச் சென்று விடுவார். நடையில் தளர்ச்சியெல்லாம் இருக்காது. நீளமான கால்கள் என்பதால்  உயரமாக இருந்தார். கைகளும் நீளமாகவே தொங்கும். கண்ணாடி போடாமல் நடக்கும்போது  தரையைப் பார்த்தபடி நடப்பார்அதனால் முதுகு வளைந்திருப்பதுபோலத் தோன்றும். அப்படி நடந்துவரும் அந்த உருவத்தைக்  காந்தியார் எனச் சொன்னது சரியானது என பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தியைப் பார்த்து ஒத்துக்கொண்டது மனம். ஆனால் பள்ளி இடைவேளையில் வெளியே வரும்போது கோயில் திண்டில் உட்கார்ந்திருக்கும்போது காந்தியார் காணாமல் போய்விடுவார். காரணம், தொளதொளத்துத் தொங்கும் கதர் ஜிப்பாவும் வேட்டியும்.
ஒரு வரலாறு
==========
காந்தியும் காமராசரும் வரலாற்றுப் பாத்திரங்கள். ஆனால் எனது நினைவில் அவர்களைச் சித்திரமாகத்தீட்டியவர் ஊராட்சிமன்றத்தலைவர் பொன்னுச்சாமியா பிள்ளை. பொன்னுச்சாமியா பிள்ளையை நாவலின் மையப்பாத்திரமாக எழுதிப் புனைவாக ஆக்கலாம். அவரை எழுதும்போது உத்தப்புரம் பஞ்சாயத்தின் வரலாறாக அந்தப் புனைவு மாறிவிடும். ஆம்.உத்தப்புரம் என்னும்   தீண்டாமைச் சுவர் எழுப்பி வரலாறு படைத்த அந்தக் கிராமத்தின் தலைவராக இருந்தவர் தான் காந்தியார். மொத்தப் பஞ்சாயத்துக்கும் அவரால் தொடங்கப்பெற்ற  பள்ளிக்கூடம் தான் ஒரேயொரு பள்ளி. அதில் தான் நான் படித்தேன். என்னோடு அந்தப் பஞ்சாயத்தின் அனைத்துச் சாதிப் பையன்களும் பெண்பிள்ளைகளும் படித்தார்கள். சுவரெழுப்பித் தடுக்கப்பெற்ற அரிசனத் தெருப்பையன்களும் படித்தார்கள். காந்தியார் தோற்கடிக்கப்பட்ட பின் பஞ்சாயத்தின் ஐந்து கிராமங்களுக்கு ஐந்து பள்ளிக்கூடங்கள் வந்தன. ஆறாவதாக ஒரு பள்ளிக்கூடம் அரிசனங்கள் மட்டும் பயிலும் பள்ளியாக வந்தது. ஒரு பள்ளி, ஆறுபள்ளிகளாக மாறிய வளர்ச்சி, அரிசனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒதுக்கி வைக்கப்படும் பின்னடைவோடும் வந்தது
ஒரு ஊரையோ, நிகழ்வையோ வரலாறாக  எழுத விரும்பும் நபருக்குத் தேவை ஆதாரங்கள்; சான்றுகள். உத்தப்புரத்தின் வரலாற்றை எழுதவிரும்பும் வரலாற்றாய்வாளன் செய்யவேண்டியது களப்பணி. ஊரின்  எல்லை, காலம், கணக்குபுள்ளிவிவரங்கள், தீர்மானங்கள்,படங்கள், பட்டயங்கள்வழக்குகள், தீர்ப்புகள், மீறல்கள், இடப்பெயர்வுகள் எனச் சான்றுகளை இணைக்கவேண்டும். இணைத்துத் தொகுத்துத் தருகின்றபோது வரலாறாக நம்பப்படுகிறது. நம்பப்படும் வரலாறு உண்மை. உண்மையைத் தரும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டு  இணைக்கப்பட்ட  சான்றுகளில் விடுபடல்களும், அதற்கான நோக்கங்களும் இருக்கின்றன என, இன்னொருவர் சொன்னால் அந்த வரலாறு கேள்விக்குரியதாக ஆகிவிடும். அப்போது அந்த வரலாறே புனைவாக மாறிவிடும்.
வரலாறுகள் உள்ளன; வரலாறு இல்லை
==============================
எழுதப்பெற்ற வரலாறுகளெல்லாம் புனைவுகளாக மாறிக்கொண்டிருக்கும் காலம் நமது காலம். என்றாலும் வரலாறுகள் தேவைப்படுகின்றன. ஆம் வரலாறல்ல; வரலாறுகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் வரலாறு எழுதப்படவேண்டிய தேவை இருப்பதைப்போல, அவற்றிலிருந்து வரலாற்றையும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. தமிழக வரலாற்றை எழுதுவதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலவகையான சான்றுகள் முதன்மையாக உதவுகின்றன. நம்பத் தகுந்த ஆதாரங்கள் அல்ல என்றபோதும் இலக்கியங்களக் கொண்டே முற்காலப்பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் காலத்து வரலாற்றை உருவாக்கியுள்ளோம். களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்றொரு கற்பிதத்தை உருவாக்கியதின் பின்னணியில் இருப்பன இலக்கியங்கள் கூட அல்ல. தொன்றுதொட்டுச் சொல்லப்பட்ட பழங்கதைகளைக் கொண்டே கடல்கொண்ட தென்னாடு, மூன்று சங்கங்கள் பற்றியெல்லாம் பேசுகிறோம். பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தை எழுதத் தேவையான கல்வெட்டுகளும் பட்டயங்களும் செப்பேடுகளும் கிடைத்தபின் நம்பத்தக்க வரலாற்றை உருவாக்கினார்கள் வரலாற்றாசிரியர்கள். கடந்தகாலங்களை ஆட்சித் தொடக்கம், நிகழ்வுகள், முடிவு என முறைப்படுத்தி எழுத முடிந்த நமக்குக் காலனியகாலத்தைப் பற்றிச் சொல்லத் தேதியுட்படப் போதுமான சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்திக் காலனிய வரலாற்றை எழுதும் முறைமைதான் தமிழில் உருவாகவில்லை. நாயக்கர்கள் கால வரலாற்றையெல்லாம் சொல்லும் வரலாற்று நூல்கள் தமிழில் கிடைக்கின்றன. ஆனால் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனி காலத்தையும், பிரிட்டனின் நேரடியாட்சிக் காலத்தையும் சொல்லும் வரலாற்று நூல்கள் இல்லை. விடுதலைக்குப் பிந்திய தமிழக வரலாற்றை முறையாகச் சொல்லும் வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் ஒருவரையும் காணோம்.முழுமை வரலாற்றுக்குப் பதிலாக உதிரியான வரலாறுகளே கிடைக்கின்றன. கட்சிகளின் வரலாறுகளைக் கட்சிக்காரர்களே எழுதுகிறார்கள். சாதிகளைப் பற்றிய, சாதிச்சங்கங்களைப் பற்றிய வரலாற்றை அவரவர்களே எழுதுகிறார்கள். கவிதை, நாடகம், புனைகதை, திறனாய்வு வரலாறுகள் எழுதப்பெற்றுள்ளன. அச்சுப் பண்பாட்டின் வரலாறுகூட எழுதப்பட்டுள்ளன. பாலங்கள், கோயில்கள், ஊர்கள், நகரங்கள் என இடங்களைப் பற்றிய வரலாறுகள் கூட எழுதப்படுகின்றன. ஆளுமைகள், நபர்கள், தலைவர்களின் வரலாறுகளும் எழுதப்படுகின்றன. எழுதப்படும் வரலாறுகளிலெல்லாம் புனைவுகள் கலந்துகட்டித்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. கலந்துகட்டிச் சொல்லப்பட்ட வரலாறுகளில் ஒன்றாகத் தமிழ்ச்சினிமாவின் வரலாறும் நமக்குக் கிடைக்கின்றன.
சமகாலத் தமிழகத்தின் வரலாற்றை எழுதும் வேலைக்கு ஒவ்வொரு துறையிலும் செயல்படும் அடிப்படைவாதிகளும், ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் அவரவர் போக்கில் பங்களிப்புச் செய்வதின் வெளிப்பாடே உதிரியான வரலாறுகள். அவைகளைத் தொகுத்துப் பொதுமையான வரலாறொன்றைப் பின்னொரு நாளில் வரும் வரலாற்றாய்வாளர் அல்லது ஆசிரியர் எழுதக்கூடும். அந்த நேரத்தில் தமிழ்ச்சினிமாவைத் தரவாக/ சான்றாகக் கொள்ளாமல் விட்டுவிடும் வாய்ப்புகளே அதிகம். ஒரு காலகட்டத்து வரலாற்றை எழுதுவதற்கு எவையெல்லாம் சான்றுகளாக அமையக்கூடும் என்ற தெளிவற்ற பார்வையோடு இயங்கும் வரலாற்றாய்வாளர்களால் தமிழ் சினிமா  எப்படிக் கவனிக்கப்படும் என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகம் தேவையற்றது என்று நிரூபிப்பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு தூண்டுதல்
=============
தமிழ் வாழ்வின்/ தமிழர்களின் அகப்புற வாழ்வின் பகுதியாக இருக்கும் தமிழ்ச்சினிமாவைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டுமென்ற வலியுறுத்தலைச் செய்யவேண்டும் என்ற விருப்பம் நீண்டகாலமாக எனக்குண்டு. நினைவு தெரிந்த நாள் முதலாகத் தமிழ் சினிமாக்களைப் பார்த்துவருகிறேன். தமிழின் முக்கியமான சினிமாக்கள், தமிழ் வாழ்வில் ஏற்படுத்த விரும்பும் தாக்கங்களைக் குறித்துக் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக எழுதிவருகிறேன். எனக்குள் ஓடிக்கொண்டிருந்த இந்த எண்ணத்தைத் தூண்டியது அண்மையில் நான் படித்த புத்தகம். இரண்டுமாத காலம் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணம் செய்வதற்காகப் போயிருந்தபோது, ஒரு நூலகத்தில் அதனைப் பார்த்தேன்; எடுத்தேன்; படித்தேன். திரைப்படங்களை முன்வைத்து உத்தேசமான வரலாறு (Past Imperfect : History According to the Movies) என்னும் பொருள் தரும் தலைப்புடன் கூடியது அந்த நூல்நம்காலத்தின் ஆகக்கூடிய புனைவான திரைப்படங்களை முன்னிறுத்தி/ சான்றுகளாக்கி வரலாற்றைப் பேசுவது பற்றியது அந்தப் புத்தகம்.அந்தப் புத்தகம் தான் இந்தத் திறப்பைச் செய்திருக்கிறது. பெரும்பாலும் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பியப் படங்களை முன்வைத்தே எழுதப்பட்டது. 60 படங்களை முன்வைத்து வரலாற்றைப் பேசும் இந்தப் புத்தகத்தில் 200 ஆண்டுகளுக்குப் பின் இந்திய விடுதலை அடைந்த வரலாற்றைக் காந்தி படத்தை
முன்வைத்துப் பேசலாம் என்று ஒரு கட்டுரையும் கூட இருந்தது. எழுதியவர் ஜெப்ரி சி.வார்டு.
சமகாலத் தமிழ் வரலாற்றைப் பேசும் ஆதாரங்களாகத் தமிழ்ப் படங்களைத் தொகுத்துக் கொண்டு இப்படியொரு உத்தேச வரலாற்றைக் கட்டமைக்கும் ஆய்வை ஒருவர் செய்யலாம். அதற்கான ஆய்வுமுறையியலும் கருதுகோள்களும் அந்நூலில் இருந்தது. அந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளைவிடவும் எரிக் ஃபானரும் ஜான் சயல்ஸும் நடத்தியுள்ள உரையாடல் முக்கியமானதாக இருக்கிறது. தகவல் தொடர்பியல் துறையில் ஆய்வுசெய்யும் ஆய்வாளர்களும் வரலாற்றியல் ஆய்வாளர்களும் இணைந்து கவனம் செலுத்த வேண்டிய ஒன்று. அப்படிக் கவனம் செலுத்தும்போது, இரண்டு துறையிலும் விருப்பமும் அடிப்படை அறிவும் தேவை. அத்தோடு சினிமா என்னும் கலையின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளவேண்டும். இப்படியான ஒரு ஆய்வை இதற்கு முன்பே செய்த அனுபவம் எனக்குண்டு. குறிப்பிட்ட காலகட்டத்து இலக்கியங்களைச் சான்றுகளாக்கி வரலாற்றைப் பேசிய ஆய்வு அது. அதற்கென உருவாக்கிய முறையியலை அப்படியே திரைப்படங்களைச் சான்றாக்கிப் பேசும்போது பயன்படுத்தமுடியும் என்று சொல்வதற்கில்லை.
சினிமா, ஒரே நேரத்தில் கலைவடிவமாகவும், ஆகப்பெரும் ஊடகமாகவும், பெரும்பொருளை பணத்தை முதலீடு செய்து நடத்தும் வணிகமாகவும் இருக்கிறது. இம்மூன்றின் விதிகளும், இயங்குநிலைகளும் நோக்கங்களும் செயல்படும் களம் சினிமா. இப்படி இயங்கிய தமிழ்ச்சினிமா தான் கட்டபொம்மன் என்ற குறுநிலப் பாளையக்காரரை, வீரபாண்டிய கட்டபொம்மனாக ஆக்கிக் காட்டியது. ராஜராஜ சோழனைத் தமிழின் அடையாளமாகக் கட்டமைத்தது. வரதராஜ முதலியாரை நாயகனாக முன்னிறுத்தியது. ..சிதம்பரம்பிள்ளை, பாரதியார் போன்ற  அறியப்பட்ட ஆளுமைகளைப் பற்றி மட்டுமல்லாமல், அறியப்பட்ட நிகழ்வுகள், இடங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட காலப்பின்னணியில் நிறுத்தி வரலாற்றைப் புனைவாக்கிப் பேசியிருக்கிறது. இந்திய விடுதலைப் போரைக்குறித்த சினிமாக்கள் எடுக்கப்பட்ட அளவுக்குப் பிந்திய வரலாறுகள் புனைவுகள் ஆகவில்லை. என்றாலும் தேடிப்பார்க்கவேண்டும். புனைவுகளுக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றைத் தேடுவதென்பது ஆய்வாளர்களுக்குப் புதையல் தேடுவதைப் போன்றதொரு பணி. புதையலில் ஏதாவது கிடைக்கலாம். கிடைத்ததுவரை லாபம் என்று தோண்டியதை மூடிவிடலாம். புதையல் தேடும் ஆசையோடு பார்த்த சினிமாக்களை முன்னே பரப்பி வைத்துக்கொண்டு வரலாற்றைப் பேசலாம்.

கருத்துகள்

saru.manivillan இவ்வாறு கூறியுள்ளார்…
good idea....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்