கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்


அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை
========================================
இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.


அச்சில் (தடம், நவம்பர்,2016) வந்திருக்கும் தனது கவிதையொன்றை அனார் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்தக் கவிதையின் தலைப்பு " ஆழ்தொலைவின் பேய்மை"
’ நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’
என்பதான இருமைக்குள் விரியும் படிமக் காட்சிகள் பிறன்மை(Other) யையும் தன்னிலை(Self)யையும் அடுக்கிக் காட்டுகின்றன.
பகலை முந்திச்செல்லும் இரவு எனத் தன்னை ( ) முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிறன்மையை ஆழ்தொலைவின் பேய்மையாக உருவகித்துக்கொண்டு உரையாடலை நிகழ்த்துகிறது. தனக்கும் அதற்குமான தூரம் வெகுதூரமாக இருந்தபோதிலும் தனது இருப்பு, 'வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றம்' மின்வெட்டு, கரைந்தபடி அலையும் ஒற்றைக்காகம், ஜொலிஜொலிப்பாக விரியும் அமிர்தத்தின் குடுவை எனச்சொல்கிறது. என்றாலும் கணத்தில் சூழும் பேய்மைகள், மரணத்தை நினைவூட்டும் அச்சமாகச் சூழ்கிறது என விரிகிறது.
கவிதைக்குள் இருக்கும் ‘சொல்லி’யின் தவிப்பும் நிலைப்பாடும் தனியொருவருக்குரியதாக இல்லாமல் பொதுநிலைக்குரியதாக ஆவதில், ஒவ்வொரு அகக்கவிதையும், பொதுநிலைக்கவிதையாக மாறிவிடும். அனாரின் இந்தக் கவிதை அதைத்துல்லியமாகச் செய்துகாட்டியிருக்கிறது.ஆணைச்சார்ந்து வாழும் பெண்மையாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றல், உற்பத்தித்திறன், பயணம் தரும் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் மனுசியாக உலகத்தின் பரப்பிற்குள் விரிக்கும் ஒரு பெண்ணைச் சூழும் பேய்ம்மைகள் பலவிதமானவை. அவற்றின்மீது அந்தப்பெண் கொள்ளும் கோபத்தின் ஆவேசத்தை, ஆவேசமான சொற்களைத்தவிர்த்து அதன் வீர்யம் குறையாத வேறுசொற்களால் நிரல்படுத்துவதில் அனார் கவனம் செலுத்துபவர். அந்த நிரல்படுத்தலில் தான் வாழும் நிலம்சார்ந்த காட்சிச்சித்திரங்களையும் தந்துவிடுவார். இந்தக்கவிதையிலும் அதை உறுதிசெய்திருக்கிறார். அச்சத்தின் சாயலும் பெருமிதத்தின் நிமிர்வுமெனக் கசியும் இந்தக் கவிதையில் ஒரு தமிழ்க்கவிதையின் அழகியலான முதல், கரு, உரி என்ற மூன்றும் சம அளவில் வெளிப்பட்டுள்ளது. அந்தச் சமநிலையில்தான் கவிதை முழுமையாகும். இந்தக் கவிதை அப்படியொரு முழுமையான கவிதை:
இனி முழுமையாக அந்தக் கவிதையைத் தருகிறேன்.
=========================
வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்
மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக….
சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்கு மறுக்காக பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக
இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலி ஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து
மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்
மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்
பொங்கிவரும் நுரைத்துளிகளை
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்
மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ் தொலைவில்
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள் மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’

இடம்பெயர்த்து அழைத்துச் செல்லும் கவிதைச் சொற்கள்

தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை. 
குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக எனது வாசிப்பிலிருக்கும் அனார் அப்படியொரு கவி. 

சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மறந்து தூரமாக அழைத்துப் போய்விட்டு, உடனே திரும்பாமல் நின்று நிதானமாக அழைத்துவரும் கவிதைகளைத் தொடர்ந்து எழுதித்தருகிறார் அனார் . அவரது தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை படித்தவுடன் உடனே அடுத்த கவிதையை வாசித்துவிட முடியாது. 
ஒவ்வொரு கவிதையையும் புதிதான ஒரு மலைப்பிரதேசம் அல்லது பள்ளத்தாக்கு அல்லது சமவெளி அல்லது வனம் அல்லது காடு என ஏதோவொரு நிலவெளியில் அல்லது பல நிலவெளிகளின் கலவையான ஒரு பிரதேசத்தில் நிறுத்திவிடுவனவாக இருக்கும். 

தமிழ்ச் செவ்வியல் அழகியல் கூறும் நிலங்களை விதம்விதமாக உருவாக்கி அதனோடு பொழுதுகளையும் இணைத்து விடும்போது வாசிப்பவர்கள் தங்கிவிடுவதற்கான மாய உலகம் உருவாகிவிடுகிறது. இதுதான் எனச் சொல்லிவிட முடியாத நிலவெளியைக் குறிப்பான காலத்திற்குரியனவாக ஆக்கிக் கைப்பிடித்து அழைத்துச் சென்று நிறுத்திவிடும் அனாரின் கவிதைகள் அவ்வப்போது வாசிப்பதற்குரியனவாக இருக்கின்றன. கவிதைக்குள் இருப்பவள் ஒரு பெண் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடும் அனார், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகைமாதிரிப்பெண்கள் யாரையும் காட்டுவதில்லை. அதனாலேயே பெண்ணிய விவாதங்களை நிராகரிக்கின்றன என்று விமரிசனச் சொல்லாடல்களை முன்வைக்கலாம். ஆனால் அழகியலையும் நேசங்களையும் எதிர்பார்க்கும் / காட்டும் பெண்மையை ரசிப்பதற்கான கணங்களைத் திரும்பத்திரும்ப எழுதிக் காட்டுகிறார். அதனை விரும்பும் மனமும் அந்தரங்க ஏக்கமும் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வப்போது துளிர்த்துவிடத்தக்கன . இதனை மறுப்பவர்கள் யார் இருப்பார். 
இன்றைய நெருக்கடிக்குள் இந்தக் கவிதையைத் திரும்பவும் வாசித்தபோது அதன் முன்வைப்புக் கூடாக இன்னொரு வெளிக்குள் நுழைந்து காணாமல் போகமுடிந்தது. 
கவிதைக்குள் மறையும் மழைக்காடுகள்
======================================
என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன.
தீப்பிழம்புகள் கொண்ட வானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது. 
தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடுமுழுக்க
மந்திரித்துவிடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின்வாங்குகின்றன 
மழையும் சுவையும்
காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக்குதிரை
தொழுவம் அடையும் நேரம் 
மஞ்சள் அலரிப்பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண்சிமிட்டலையும்
எடுத்துப் போகிறாள் 
வெதுவெதுப்பான மழைக்காடாக
உருக்கொள்கின்றன என் கவிதைகள் 
மழை சிணுசிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக் கொள் 
இந்தக் கவிதையைத் தன்னுள் கொண்டுள்ள ஜின்னின் இரு தோகை என்னும் தொகுதி சில மாதங்களாகவே என் பையில் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குறிப்புக்குப் பின்னும் பையிலேயே இருக்கும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.நடப்பு வெளியை விலக்கிவிட்டு இன்னொரு வெளிக்குள் பிரியமானவர்களோடு மகிழ்ச்சியாகவும் குதூகலத்தோடும் கைகோர்த்துச் செல்ல ஆசைப்படும்போது அதனை உருவாக்கித்தரும் விதமாகப் பல கவிதைகள் இருக்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்