இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள் : காண்டவ வனத்தை முன்வைத்து



மார்ச் 18, சனிக்கிழமை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமி நெறியாள்கையில் மேடையேறிய காண்டவ வனம் என்னும் நாடகப்பிரதியை ந.முத்துசாமி நாடகங்கள் என்ற தொகுப்பில் வாசித்திருக்கிறேன். முழுமையாக இல்லாமல் சில காட்சிகளாக மேடையேறியதையும் பார்த்திருக்கிறேன். அம்மேடையேற்றம் நாடகம் எழுதப்பெற்ற 1991 ஆம் ஆண்டிலா? அதற்கடுத்த ஆண்டிலா? என்பது நினைவில் இல்லை. அப்போது அப்பிரதியின் பெயர் காண்டவ வன தகனம். இப்போது காண்டவவனம். காண்டவ வன தகனம் என்பது மகாபாரத்தில் ஒரு பகுதி. காண்டவ வனத்து விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவ்வனத்தை அழித்துக் கொடுத்து, அதற்கீடாக காண்டீபம் என்னும் வில்லையும் எடுக்க எடுக்கக் குறையாத ஆயுதத் தாங்கியான அம்பறாத்தூணியையும் பெற்றுக் கொண்ட கிளைக்கதையைச் சொல்லும் பகுதி. பாண்டவர்களின் நண்பனான கிருஷ்ணன், ஆயுதங்களைக் கையாள்வதில் வல்லமையுள்ள சத்திரியனான அர்ச்சுனனை மேலும் வல்லமையுள்ள வீரனாகவும், போர்விரும்பியாகவும் ஆக்குவதைச் சொல்லும் பகுதி காண்டவ வன தகனம். ஆயுதம் பெறுவதும் போரை நியாயப்படுத்துவதும் மகாபாரதமென்னும் பெரும்பிரதியின் முதன்மை நோக்கம். இது ந.முத்துசாமியின் பிரதியிலேயே இருக்கும் ஒரு மறுவிளக்கம் (Interpretation). இம்மறுவிளக்கத்தை நிகழ்காலத்தில் நிறுத்திப் பெருநகர உருவாக்கத்தின் பின்னணியில் அதே பிரதியைப் பல்தள விளக்கப் பிரதியாக ஆக்கி மேடையேற்றியிருந்தார் ப்ரசன்னா. நெறியாளராக ஒருபிரதியை மேடையேற்றிக் காட்டுவதோடு நிறுத்தாமல், பார்வையாளர்களை நவீன நாடகத்தின்பால் இழுக்கச் செய்யும் முயற்சியாகத் தொடர்ந்து 16 நாட்கள் மேடையேறவும் வழிகண்டுள்ளார். இதற்குக் கூத்துப்பட்டறை அமைப்பும் அதன் நடிகர்களும் ஒத்துழைத்துப் பணியாற்றுகின்றனர். 

மொத்தத்தில் 1000 பேரைப் பார்க்கச் செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொண்ட இந்த முயற்சி நவீனத்தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. நாடகமொன்றைத் தயாரித்துவிட்டுப் பார்வையாளர்களின் வருகையைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாகப் 16 நாட்கள் - மார்ச் 18 முதல் ஏப்ரல் 2 வரை நடத்துகிறது கூத்துப்பட்டறை. 50 பேர் தாராளமாக உட்காரக்கூடிய கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் நெருக்கியடித்து உட்கார்ந்தால் கூடுதலாக 20 பேர் அமர்ந்து பார்க்கலாம். ஆனால் அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கிலும், திருவான்மியூர் அரங்கிலும் சில 100 பேர் அமர முடியும். சென்னையிலிருக்கும் நவீன இலக்கியவாதிகளில் 5 சதவீதமாவது இந்நாடகத்தைப் பார்ப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நவீனக் கவிதை, புனைகதையென அலையும் நவீனத்துவக் கூட்டம் நாடகத்தின் நவீனத்துவ நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவதைத் தமிழ்நாட்டின் விநோதங்களில் ஒன்றாகவே நினைத்துக்கொள்வேன். 

படைப்பாக்க நாடக நெறியாள்கை 
நிகழிடம், காலம், பாத்திரங்கள் என அனைத்தையும் எழுதிவாங்கி, அச்சுப்பிசகாமல் மேடையேற்றிக் காட்டிய இயக்குநர்களை நாடகவரலாறு பெரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதற்குமாறாக எழுதியவரின் பிரதியின்மேல் தான் மேடையேற்றும் காலம் மற்றும் சமூகப்போக்கோடு இணைந்துநின்று, தனது காலத்துப் பார்வையாளர்களுக்கு இந்தநாடகப் பிரதியை என்னவாகத் தரலாம் என்று யோசித்து, அதன்பேரில் இன்னொரு ஆக்கத்தைச் செய்பவர்களையே படைப்பாக்க நெறியாளராக (Creative Director) அரங்கியல் வரலாறு எழுதிவைக்கிறது. தமிழில் அப்படியான இயக்குநர்களை ஒரு கைவிரலுக்குள் அடக்கிவிடலாம். தமிழின் நவீன நாடக வரலாற்றில் அப்படியொரு இடத்தைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து வேலை செய்துவருபவர் ப்ரசன்னா ராமஸ்வாமி. அப்படி அவர் இயங்குவதற்குப் பின்னணியில் தொடர்ச்சியான அவரது வாசிப்பு காரணமாக இருக்கிறது. தமிழில் எழுதப்படும் எல்லாவகைப் போக்கின் எழுத்துகளையும் அந்தந்தப் போக்கின் வழியே வாசித்துத் தனது நிலைபாட்டில் உள்வாங்கி வைத்திருப்பவர் அவர். அப்படியான வாசிப்பு அவரது நாடக ஆக்கங்களின் பகுதியாக ஆகியிருப்பதைக் கவனித்திருக்கிறேன். தான் வாசித்த கவிதை, புனைகதை, ஓவியப் பிரதிகளின் படிமங்களையும் சொற்களையும் மூலப்பிரதியின் இடையீட்டுப் பிரதிகளாக்கியே அவரது பல நாடகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. 

ப்ரசன்னாவின் நெறியாள்கையில் மேடையேறிய பெரும்பாலான நாடகங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் அவரது தன்னிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படி வெளிப்படாமல் பிரதியின் போக்கில் செல்பவர் படைப்பாக்க நெறியாளராக ஆகமுடியாது. இந்தியத் தத்துவ மரபில் உள்ளோடும் முரண்பாட்டில் நிலை கொண்டிருக்கும் ஒரு தன்னிலையின் தவிப்பும் விடுதலைக்கான எத்தணிப்பும் ப்ரசன்னாவின் தன்னிலை என்பது எனது கணிப்பு. கவி சுப்பிரமணிய பாரதியிடம் வெளிப்பட்ட தவிப்போடும் எத்தணிப்போடும் இதனை ஒத்துச் சொல்லலாம். நவீனத்துவத்தின் நுழைவோடு இயங்கிய பாரதியை , பின் நவீனத்துவச் சுழலில் அலையும் நிகழ்காலத்தில் கொண்டுவந்து நிறுத்தினால், ப்ரசன்னாவின் தன்னிலையைப் போன்றதொரு தன்னிலையாக வெளிப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. 

மறுவிளக்கமும் மறு ஆக்கமும் 
ப்ரசன்னாவின் தன்னிலை வெளிப்பாட்டோடு அமைந்துள்ள காண்டவ வனம் மேடையாக்கத்தை மறுவிளக்கத்தின் இன்னொரு பரிமாணமான ‘மறு ஆக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒரு பிரதியை மேடையேற்ற நினைக்கும் இயக்குநர், அப்பிரதியை என்னவாக நினைக்கிறார் என்பதிலிருந்தே மறுவிளக்கமும் மறு ஆக்கமும் சாத்தியமாகிறது. மகாபாரதத்தைப் புராணமாகக் கருதினால் மாற்றங்கள் செய்யாமல் அப்படியே பார்வையாளர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட வேண்டும். கடந்த கால் நூற்றாண்டுகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகத் தயாரிக்கப்படும் தொடர்கள் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன. ராமாயணம், பாரதக்கதைகள், அவதார நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் புராணங்களாகக் கருதி அவற்றில் வரும் பாத்திரங்களைக் கடவுள்களாக்கிப் பிம்பவடிவில் பெரிதாக்கித் தருகின்றன. ஆனால் இவையெல்லாம் ஓர் இலக்கியப்பிரதி என நினைக்கத்தொடங்கினால், அவற்றை விமரிசனம் செய்யமுடியும்; மறுவிளக்கம் கூறமுடியும் என்ற நிலைப்பாடு எடுக்கமுடியும். அப்படி நினைத்த நாடக ஆசிரியர்களின் பிரதிகளே இந்திய நவீனத்துவப் பிரதிகளாகக் கருதப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பத்தாண்டுகளில் இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் அப்படியான நாடகாசிரியர்களை அடையாளங் காணமுடியும். கிரிஷ் கர்னாட் உலக அளவில் அறியப்பட்டவர். தமிழில் இந்திரா பார்த்தசாரதியும் ந.முத்துசாமியும் முன்னோடிகள். 
மேடையேற்றும் தரும் அனுபவம் 
ந.முத்துசாமியின் பிரதி, ப்ரசன்னாவின் மேடையேற்றத்தில் பெருநகர உருவாக்கத்தில் அழிபடும் வளங்களையும், அழிப்பில் ஈடுபடும் அப்பாவி மனிதர்களின் மனக்குமுறல்களையும், அவர்களைச் சுரண்டுவதில் முனைப்புக் காட்டிக் கொள்ளை அடிக்கும் பெருங்குழுமங்களின் லாபவேட்கையையும் விசாரிக்கும் பிரதியாக மாறியிருக்கிறது. இந்திய நாட்டார் மரபிலிருக்கும் நேரடிப்பேச்சுமுறையெனும் கூற்றுமுறையின் நவீனத்துவ அழகியல் வடிவமே காவிய அரங்கியல்(Epic theatre ). பெர்ட்டோல்ட் பிரக்டினால் உலகுதழுவிய அரங்க அழகியலாக மாறிவிட்ட அழகியல் இத்தயாரிப்பில் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார் ப்ரசன்னா. அவரது கற்பனைக்கும் முன்வைப்புக்கும் முழுமையாகத் தங்களை ஒப்புக்கொடுத்து உடலைக் கொடுத்துள்ளனர் கூத்துப்பட்டறையின் நடிகர்கள். வசனமொழிதலுக்கான பயிற்சிகளோடு பாடுவதற்கான பயிற்சிகளும் கொண்ட நடிகர்கள் அவர்கள். ஒரு நெறியாளரின் நோக்கத்தை உள்வாங்கி ஒத்திசைந்து செயல்படும் லாவகமும் அங்கிருக்கும் பலருக்குக் கைகூடியிருக்கிறது. நடிகர்களின் கைகளில் அசையும் பொருட்களாகவும் கட்டித்தொங்கவிடப்படும் விளம்பரத்தட்டிகள் போலவும் நாடகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட முத்துசாமி நடேஷின் கோட்டோவியங்கள் புராண நிகழ்வையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஊடாட்டக் கருவியாக அலைந்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் கூத்துப்பட்டறை போன்ற முழுநேர நாடகக்குழு ஒன்றினாலேயே இதுபோன்ற தயாரிப்புகள் கைகூடும். 

சென்னை போன்ற பெருநகரக் கான்கிரீட் காடுகள் உருவாகத் தமிழ்நாட்டின் மாவட்டங்களிலிருந்து மரங்களும் மனிதர்களும் கொண்டுவரப்பட்டனர் என்பதோடு நில்லாமல், உலகமயமாதலுக்குப் பின் பெருமுதலாளிகள் லாபநோக்கக் கரங்கள் இந்தியா முழுக்கப் பரவி இருப்பதையும் நாடகம் முன்வைக்கிறது. குறைவான கூலிக்காக ஒவ்வொரு மாநிலக் கிராமங்களிலிருந்தும் உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லா மனிதர்களை இழுத்துவந்து வனமழிக்கும் வேலையின் பங்குதாரர்களாக்கும் நிகழ்வைக் காட்சிகளாக்கித் தான் நாடகத்தொடக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. முடியும்போது நாடகம் முடிந்துவிட்டது; இப்போது நம்மைப் பற்றிப் பேசுவோமென அந்த நடிகர்கள் வேடங்களைக் கலைத்து விட்டுப் பேசுகின்றனர். ந.முத்துசாமி, ப்ரசன்னா ராமஸ்வாமி ஆகியோரால் பாத்திரங்களாக்கப்பட்ட நடிகர்களைப் போலவே தான் சென்னையின் சாலையோரங்களிலும் சேரிப்புறங்களிலும், புதிதாக உருவாக்கப்படும் குடியிருப்புகளிலும் மனிதர்கள் அலைகின்றார்கள். அப்படி அலையச்செய்தவர்கள் யார்? நாம் ஏன் அவர்களின் பாவைகளாக ஆகிவிட்டோம் என்ற தன்னுணர்வு பெற்றவர்களாக மனிதர்கள் மாறிவிட்டால் காண்டவ வன தகனத்தை - கீழவெண்மணி எரிப்பை, யுத்தங்களில் கொல்லப்பட்ட கோரத்தை உணர்ந்தவர்களாக ஆகிவிடுவார்கள். அப்படி ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடுதான், பாத்திரங்களின் வேடங்களைத் துறந்து விட்டு நடிகர்கள் இங்கே நடக்கும் கொடுவினைகளின் பங்காளிகள் நாங்களல்ல என்பதைக் கொட்டித்தீர்க்கிறார்கள். ஏறத்தாழ 100 நிமிடங்கள் நிகழ்ந்த காண்டவ வன அரங்காடல், முழுமை நாடகம் ஒன்றைக் கண்ட அனுபவத்தைத் தந்தது. 

சென்னையில் 16 நாட்கள் தொடர்ந்து நடப்பதைப் போலத் தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இந்நாடகம் மேடையேற வேண்டும். இயற்கை வளங்களைத் தங்களின் சுகமான வாழ்க்கைக்காக்க் கொள்ளையடித்து வாழும் நகரவாசிகளின் மனதைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்நிலையின் மனப்போக்கை மாற்றவேண்டும். அம்மாற்றம் நிகழாமல் காண்டவ வனம் அழிக்கப்பட்டதுபோல் இந்திய வனங்கள்- வளங்கள்- அழிக்கப்படுவது முழுமையடைந்து விடும். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்