ஆய்வுத்தலைப்பைத் தேடியொரு பயணம்- சில குறிப்புகள்.

முன்னுரை: பல்கலைக்கழகப்பட்டங்களுக்கான கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்த நிலையில் முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும் ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன.

இத்தேவைகளின் பெருக்கம் தமிழாய்வு என்னும் மரத்தின் இருபெரும் கிளைகளாக இருந்த மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் எப்படி விரிவாக்குவது என்ற கேள்விக்குள் நகர்த்தின. இந்நகர்தலின் பின்னணியிலும் மேற்கத்தியக் கற்கைமுறைகளும் சிந்தனைப்பள்ளிகளுமே செயல்பட்டன. மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவை தந்த புதிய கருத்தியல்கள், சார்புபாடங்களையும், துணைப்பாடங்களையும் உருவாக்கித் தந்தன. புதிதுபுதிதாகக் கண்டறியப்பட்ட துணைப்பாடங்களும் சார்புப்பாடங்களும் சேர்ந்து தமிழின் ஆய்வுப்பரப்பை விரித்துக்காட்டியுள்ளன. இவை வரவேற்க வேண்டியன; ஏற்கவேண்டியன. ஆனால் தொடர்புகள் உள்ளனவா என்ற புரிதலின் அடிப்படையில் செய்யப்படவேண்டியன.

இரண்டும் ஒன்று என்பதாகவே மொழியும் இலக்கியமும் அறியப்படுகின்றன. தமிழின் தொல் இலக்கணமான தொல்காப்பியம் எழுத்து, சொல் என்னும் மொழிக்கூறுகளை விளக்கி அவற்றின் சேர்க்கையால் பா என்னும் பொருள்கொண்ட இலக்கியம் உருவாவதாகவே விளக்கியுள்ளது. ஆகவே மொழியில் இருப்பது இலக்கியம்; இலக்கியமாயிருப்பது மொழி என்ற நிலையில் மொழியும் இலக்கியமும் இணைந்தவை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. எந்தவொரு மொழியிலும் இவ்விரண்டையும் பிரித்துப்பார்ப்பதில்லை. தொடக்க காலத் தமிழாய்வுகளும் மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் ஒருமரத்தின் இருகிளைகளாகவே கருதின. ஆனால் தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறிய நிலையில் தெரிவுசெய்யப்படும் தலைப்புகள், ஒரு மரத்தின் புதிய கிளைகளாக - துணைக்கிளைகளாக இல்லாமல், அக்கிளைகளில் படரும் கொடிகளாகவும் செடிகளாகவும் ஆகிவிட்டன. பற்றிப்படரும் இச்செடிகளும் கொடிகளும் முழுமையும் மரத்திற்குத் துணைசெய்யும் எனச் சொல்லமுடியாது. மரத்தை மறைக்கும் மாமதயானைகள் போல் வினையாற்றும் ஆபத்துகளும் உண்டு. அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, ஆய்வுத்தலைப்பைத் தேடிச் சென்று முடிவுசெய்யும் வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உங்கள் புலம், திணைக்களம், விருப்பப்பாடம், எனப் பயணம் செய்து முடிவு செய்ய வேண்டும்.
 
புலங்களும் துறைகளும்
புலம் என்பது, ஒருவரது புலன்கள் எவற்றையெல்லாம் உணரும் என்பதிலிருந்து உண்டாவதில்லை; எவற்றையெல்லாம் உணர்ந்து கருத்துக்களை உருவாக்கும் என்பதைக் கொண்டு உருவாவதே புலம் எனப் படுகிறது. இது சிறுசிறு வேறுபாடு களுடன் புலம்( Faculty), விருப்பப் பிரிவு (Dicipline), விருப்பத்துறை (Specialisation), விருப்பப் பாடம் (Optional Subject) போன்ற சொற்களால் சொல்லப்படுகின்றன. ஒருவரது புலம் எது என முடிவு செய்யாமல் ஆய்வைத் தொடங்கினால், ஆய்வு முடிவு அடைய வாய்ப்பே இல்லை. உலகமெங்கும் கற்கைப்புலங்களாக இருப்பனவற்றை
1 மொழிப்புலம் (Faculty of Language)
2. அறிவியல் புலம் (Faculty of Science)
3. சமூக அறிவியல் புலம் (Faculty of Social Science)
என மூன்றுவகையாகப் பிரிக்கின்றனர். தமிழியல் துறையில் ஆய்வுசெய்ய நுழையும் ஆய்வாளர் இம்மூன்றில் முதல் புலத்தைத்திற்குள் அடங்குவார். அதனால் அதன் அதன் அடிப்படை நூல்கள் அனைத்தையும் கற்கவேண்டும். அது ஆய்வுக்கான அடிப்படைத் திறமாகும் இதை ஆய்வுத்தலைப்பைத் தெரிவுசெய்தபின் செய்யவேண்டியதில்லை. இவ்வடிப்படை நூல்கள் அனைத்தும் தமிழிலேயே கிடைக்கின்றன என்றுசொல்லிவிட முடியாது. முறையான இலக்கியக் கல்வியின் வழியாக - பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு என நகர்ந்துவரும்போது அத்தகைய அடிப்படைத் திறம் உருவாகிவிடும்; உருவாகவேண்டும்.அதற்கேற்ற பாடத்திட்டம் அமைந்த கல்விமுறைக்குள் நுழைந்துவரவேண்டும். அதுவே முழுமையான துறைக்கல்வி. ஆய்வுக்கான முதல் தேடலில் துறையின் பகுதிகளைத் தெரிவுசெய்து அடிப்படைக்கல்வியைக் கற்கவேண்டும். அவ்வகையிலான கற்கைத் தாள்களை தொடக்கநிலை ஆய்வுப்பட்டங்கள் கொண்டிருக்கவேண்டும்,
நமது புலம் மொழிப்புலம். அதற்குள் மொழியைப் பற்றிப் பேசும் மொழியியல் மற்றும் இலக்கணம், மொழியைப் பயன்படுத்தி உருவாகும் இலக்கியத் துறை என இருநிலைகள் உண்டு. அதற்குள் வாய்மொழியைப் பயன்படுத்தும் வாய்மொழியிலக்கியப் பிரிவு, எழுத்திலக்கியப் பிரிவுகளும் அடங்கும். இவ்விருவகை மொழியையும் நேரடியாகப் பயன்படுத்தியும் பயன்படுத்தாமலும் உண்டாக்கப்படும் சடங்குகள், ஆட்டங்கள், கொண்டாட்டங்கள், விழாக்கள் என விரியும் பண்பாட்டுத் துறை மொழிப்புலத்தின் பகுதியாக இப்போது மாறிவிட்டது. இவற்றோடு இவையெல்லாம் எப்படி இருக்கின்றன? ஏன் இருக்கின்றன? ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவற்றிற்கான காரணங்கள் என்ன? எனப் பேசும் திறனாய்வு அல்லது விமரிசனம் என்பதும் நமது புலத்தின் பரப்பே என மேற்கத்தியக் கற்கைமுறை உறுதிசெய்துவிட்டது. இந்நிலையில் தமிழியல் துறை மாணாக்கர்களின் கற்கைப்பரப்பையும் தொடர்ச்சியான ஆய்வுப் பரப்பையும் பின்வரும் பட்டியல் வழியாக அறிந்துகொள்ளலாம்.

இலக்கணங்கள் - 
  • எழுத்துமொழி/ பேச்சுமொழி
  • எழுத்து
  • சொல் 
  • பொருள்
  • யாப்பு
  • அணி
இலக்கியங்கள்

  • பாக்கள்/ கவிதைகள்
  • கதைகள்
  • நாடகங்கள்
சார்புப் பாடங்கள்

  • வரலாறு
  • பண்பாடு
  • நிகழ்த்துக்கலைகள்
  • வாழ்வியல் கலைகள்/ முறைகள்

தொடர்புடைய பாடங்கள்
  • நாட்டாரியல்
  • இதழியல்
  • ஊடகவியல்
நேரடியாக ஆய்வுநிலைக்குச் செல்வதற்கு முன்பு ஆய்வுக்கு முந்திய தமிழ்க் கல்வியை நவீனப்படுத்தலில் செய்யவேண்டிய சில அடிப்படைகளைப் பற்றி விவாதிக்கலாம்.


கற்பித்தலின் பரிணாமம்

கற்றல் என்பதற்குள் தகவல் திரட்டல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிமாணங்கள் உண்டு . பள்ளிக் கல்வி தொடங்கி ஆய்வுக் கல்வி வரையிலான எல்லாவற்றிலும் இம்மூன்று நிலைகளும் வெவ்வேறு விதமாக நடைபெறுகின்றன. பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர் தரும் தகவல்களை மனதில் சேமித்துத் தேர்வுத் தாளில் எழுதிப் பயன்படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வியின் மாணாக்கர்கள் செய்கிறார்கள். பள்ளிக் கல்வியில் அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதைச் சரியாகச் செய்பவர்களைச் சிறந்தவர்கள் எனப் பாராட்டுவதும் ஓரளவுக்குப் பொருத்தமானது. இந்நிலையைப் பள்ளிக் கல்வியோடு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் உயர்கல்வியான கல்லூரிக் கல்வியின் தொடக்க நிலையிலேயே துறை சார்ந்த சிறப்புக் கல்விக்குள் மாணாக்கர்கள் நுழைக்கப்படுகின்றனர். சிறப்புக் கல்விக்கான பாடத் திட்டத்தில் படிக்க வேண்டிய பனுவல்கள் எனக் குறிப்பிடுவ தோடு பார்வை நூல்களையும் பாடத்திட்டக் குழுக்கள் தருவதற்கு அப்படியொரு நோக்கம் இருப்பதே காரணம்.
 
இளங்கலைப் பாடத்திட்டத்திலிருந்து விலகி முதுகலைப் பாடத் திட்டத்திற்குப் பல நோக்கங்கள் இருக்க வேண்டும். பாட நூல்களோடு (Text books) பார்வை நூல்களும் (References), மேலும் படிக்க வேண்டிய நூல்களும் (Further Readings) என்பனவும் பாடத்திட்டக் குழுக்களால் குறிப்பிடப்பட வேண்டும். முனைவர் பட்டத்திற்கு முந்திய பட்டமான இளநிலை ஆய்வுப் பட்டம் சிறப்புப் பாடங்கள் என்ற நிலையிலிருந்து திரும்பவும் பொதுநிலைக்கு நகரவேண்டும். இப்பொதுநிலை, பள்ளிக்கல்வியில் இருக்கும் பொதுக் கல்வியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பரந்த பரப்புக்குள் திறனாய்வுப்போக்கில் நுழையும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

நமது பாடத்திட்டங்கள் இத்தகைய வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக் கின்றனவா என்று கேட்டு விடை சொல்லும் வேலையை இங்கே நான் செய்யப் போவதில்லை. சில பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுக்களிலும், பல தன்னாட்சிக் குழுக்களின் பாடத்திட்டக் குழுக்களிலும் இருந்துள்ள அனுபவத்தைக் கொண்டு அதற்கான விடைகளை விவாதிக்கமுடியும். புதிய வகைப் பாடத் திட்டங்களை உலகப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை வலைத்தளங்கள் வழியாகப் பார்த்துள்ளேன். அந்த அடிப்படையில் சில முன் மொழிதல்களை பரிந்துரை செய்துள்ளேன்.

பொதுக் கல்வியும் கலை இலக்கியக் கல்வியும்

சிறப்புப் பாடங்களுக்குள் நுழையும் கல்லூரிக்கல்வி திரட்டுதல், சேமித்தல், பயன்படுத்துதல் என்பனவற்றை மனம் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதிலிருந்து விலக்கி, தேடலை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தேடல் என்பது வகுப்பறைக்கு வெளியே நூலகங்களில், இதழ்களில், ஆய்வுக் கூடங்களில், அறைக் கூட்டங்களில் என விரியலாம். தேடித் திரட்டுதலில் ஏற்படும் மாற்றம் அதன் தொடர்ச்சியாகச் சேமித்தல், பயன்படுத்துதல் என்ற நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது தவிர்க்க முடியாதது.

திரட்டப் படும் தகவல்கள், மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப் பேடுகளில் சேமித்தல், சொந்த நூலகங்களை உருவாக்கிக் கொள்ளுதல், அவற்றைப் பயன்படுத்தித் தனது தனித்தன்மைகளை வெளிப் படுத்துதல், படைப்பாக்கம் செய்தல், புலமையாளனாகக் காட்டுதல் என்பதாக முதுகலை கல்வியில் விரிய வேண்டும். இந்த விரிவும் ஆழமும் முதுகலைக் கல்வியில் சேரும் எல்லா மாணாக்கர்களுக்கும் சாத்தியப் படாமல் போனதற்குப் பல காரணங்கள் இருந்த போதிலும் முக்கியமான காரணமாக இருப்பது இப்போதுள்ள தேர்வு முறை தான்.
 
கேட்கப்படும் வினாக்களுக்கு மூன்று மணி நேரத்தில் எழுதப்படும் விடை களில் அதிகம் வெளிப்படக் கூடியன தகவல்கள் மட்டுமே. தகவல்களை வகைப்படுத்துதல், விளக்குதல், புத்தாக்க நிலையில் பயன்படுத்துதல் என்பன வெல்லாம் சாத்தியம் இல்லை. அதிலும் அனைத்து வகையான பாடங்களுக்கும் ஒரே வகையான வினா அமைப்புகளும் விடைகளுக்கான அளவு வரையறைகளும் கொண்ட தேர்வு முறைகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் இன்றைய கல்வி முறை எல்லாச் சோதனை முயற்சி களையும் மலினப் படுத்தும் முடிவுக்கே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றது. இன்றுள்ள நிலையிலேயே கூட ஆய்வாளர்கள் முழுமையாக மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப்பட்டைகளில் சேமித்தல், வகைப்பாடு செய்தல், விளக்குதல், புத்தாக்க நிலையை வெளிப்படுத்துதல் என்பதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவிற்குக் கொண்டு வந்தால் தேர்வுகள்சார்ந்த கல்வியின் குறைபாடுகள் புரிய வரலாம்.

கற்றலின் தொடக்க நிலையில் மாணாக்கர் ஒருவருக்குக் கற்பிப்பவன் தருவது தகவல்கள் மட்டுமே; அவைதான் முதன்மையானது. இத்தொடக்கம் இடைநிலைக் கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி என நீளும் பள்ளிக்கல்வி வரை தகவல்களைத் தொகுத்துத் தருவனவாகவே இருக்கின்றன. ஆனால் திரட்டும் தகவல்களை வகைப்படுத்துவது, ரகசியப்படுத்துவது, விளக்குவது, ரகசியங்களை உடைத்துக்காட்டுவது என்பதன் மூலம் பயன்படுத்துவதே உயர்கல்வியின் இயங்குநிலையாக இருக்க வேண்டும். இவ்வியங்கு நிலைக்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பதில் தொடங்கி, கற்பித்தல்,மதிப்பீடு செய்தல் வரையிலான ஆசிரியர்களின் பணியில் மாற்றங்கள் வரவேண்டும். அதேபோல் கற்றல், கற்றனவற்றைப் பயன்படுத்தித் தன்னை வெளிப்படுத்துதல் என்பதில் மாணாக்கர்கள் தீவிரமாக முயல வேண்டும். தங்களின் தேவைக்கான கோரிக்கையை முன்வைக்கவேண்டும். அத்தகைய கோரிக்கையின் முன் நிபந்தனையாகத் தேடுவதற்கான வாய்ப்புக்களையும், தேடுவதை விவாதிப்பதற்கான சாத்தியங்களையும், விவாதித்தலின் விளைவுகளை முன் வைப்பதற்கான பரப்பையும் கல்விமுறை தரவேண்டும். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டதான கல்வியாக இலக்கியக் கல்வியை மாற்ற வேண்டும். இதற்கு இன்றுள்ள வகுப்பறைக் கல்வியின் போதாமையைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதாமையின் புரிதலைச் சரிசெய்ய இன்றுள்ள ஒரே வழி, புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள நவீனத் தொழில் நுட்ப சாதனங்களை இலக்கியக் கல்வியின் கருவிகளாக ஆக்குவது தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கற்பித்தலும் கருவிகளும்

கற்றல்-கற்பித்தல் என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் பவணந்தியின் நன்னூல்
‘’ காலமும் இடனும் வாலிதின் நோக்கி / கொள்வோன் கொள்வகை அறிந்து’’-36
 
பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி / சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி -40
 
ஒரு குறிகேட்போன் இருகால் கேட்பின் / பெருக நூலில் பிழைபாடு இலனே’’ -42
 
முக்கால் கேட்பின் முறை அறிந்து /உரைக்கும் -43
 
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் / காற்கூறு அல்லது
 பற்றலன் ஆகும் -44
 
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் / 
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மைஅறு புலமை மாண்புடைத்து ஆகும். -45
 
எனச் சூத்திரங்களை எழுதி வைத்துள்ளது. இச்சூத்திரங்கள் கற்பிப்பவனும் கற்பவனும் எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கம் கொண்டன. இச்சூத்திரங்களில் வலியுறுத்தப் படும் நிலைக்கேற்ப அமையும் பள்ளிகள் ஆசிரியனை அண்டிக் கற்கும் குருகுலக் கல்விமுறையாகத் தான் இருக்க முடியும். 

நிகழ்காலக் கல்வி உலகம் ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும் போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், அந்த இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இங்கே கருவிகள் என்று பன்மையில் சொன்னாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கருவியாக இப்போது இருப்பது கணினி மட்டும் தான். அதனால் தான் இதனைக் கணினியுகம் என்கிறோம்.
 
இணைய வசதி கொண்ட கணினி நம்மிடம் இருந்தால் விரும்பும் தினசரியை வாசிக்கலாம். வார இதழையும் படிக்ககலாம். இசைக்கச்சேரிகளைக் கேட்கலாம். திரைப்படங்களைப் பார்க்கலாம். தமிழில் வரும் இடைநிலைப் பத்திரிகைகளையும் இலக்கியச் சிறுபத்திரிகைகளையும் சில வலைத்தளங்கள் தொகுத்து அளிக்கின்றன. கீற்று, பதிவுகள், திண்ணை, தமிழ்நாதம் போன்ற தமிழ் வலைத்தளங்களின் இணைப்பாகப் பல தினசரிகளும் வார, மாத இதழ்களும், இணைய இதழ்களும் இருக்கின்றன.துறை சார் ஆய்வு இதழ்களின் இணைப்புகளும் கூடக் கிடைக்கின்றன. இவையெல்லாமல் இன்று பலரும் தங்களுக்கென வைத்திருக்கும் தனி இணைய இதழ்கள், வலைப்பூக்கள் தமிழின் இடத்தை இணையத்தில் விரிவுபடுத்தி விட்டன. தனி நபர்கள் தினசரி எழுதும் கட்டுரைகளை வாசிக்கும் வாசகன் உடனடியாகத் தனது விருப்பமான எழுத்தாளனோடு கடிதம் மூலமும், குரல் மூலமும் தொடர்பு கொள்ளும் வசதிகள் இணைய வழியில் உள்ளன. பின்னூட்டங்கள் வழியாக விவாதங்களைத் தொடரலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுத்துருக்கள் சார்ந்த சிக்கலைச் சந்தித்து வந்த தமிழ்மொழி இப்போது அந்தப் பிரச்சினையிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுனிகோட் என்னும் தமிழ் விசைப்பலகைப் பரவலாக உள்ள தமிழ் எழுத்துருக்களை மாற்றித் தரும் வல்லமை உடையதாக இருக்கிறது. எதிர்காலக் கணினியில் யுனிகோட் விசைப்பலகை பொருத்தப்பட்டால் எல்லாத் தமிழர்களும் அது ஒன்றையே பயன்படுத்தும் நிலை உருவாகும். அப்படியான நிலையை உருவாக்குவதில் அரசுகளின் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். தமிழர்கள் வாழும் தேசங்களான மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் இணைந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் கூகுள் (Coogle) என்ற இணைய தளம் உலக அறிவு அனைத்தையும் கணினிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆங்கிலத்தில் அதன் பக்கங்கள் லட்சக்கணக்கிலா, கோடிகளின் எண்ணிக்கையிலா என யாரும் கணக்கிட்டு விட முடியாது. கணந்தோறும் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கின்றன. எண்ணிக்கையிலடங்கா பக்கங்களில் விரிந்து கிடக்கின்றது கணினியின் உலகம். ஒவ்வொரு தமிழனும் தனக்கான வெளியையும் கோப்புகளையும், பக்கங்களையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். தாங்கள் விரும்பினால் அவ்வளவு விசயங்களை உருவாக்கிப் பதிவு செய்யலாம். தடையற்ற அந்த வெளியைத் தான் கண்ணுக்குப் புலப்படா ஏழாம் திணை எனக் குறிப்பிட வேண்டியுள்ளது.

மழலையர் பள்ளிக்கல்வியை முடித்த சிறார்கள் தங்களுக்கான விளையாட்டுக்களைத் தேடி இணையத்தளங்களுக்குள் பயணம் செய்கிறார்கள். பிடித்துப் போன விளையாட்டைப் பதிவிறக்கம் செய்து தனிக் கோப்பில் வைத்து அலுத்துப் போகும் வரை விளையாண்டு முடிக்கிறார்கள். அறிவை மட்டும் அல்ல; மனிதனின் நினைப்பையும் விருப்பத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியைத் தலையாய வேலையாகச் செய்து வரும் கூகுள் தமிழ்ப் பதிவுகளைத் தமிழிலேயே தேடும் வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது. இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்தபடியாகத் தமிழுக்குத்தான் அந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழை முதன்மைப் பாடங்களாக எடுத்துக் கற்கும் மாணாக்கரின் இலக்கு ஆசிரியராக ஆவது என்பதாக மட்டுமே இருக்கிறது. தமிழ்க் கல்வியின் பகுதிகளாக மொழிப் பயன்பாட்டில் தேர்ச்சி, இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபாடு, பண்பாட்டுப் போக்கின் மீதான புரிதல், தமிழக வரலாற்றின் இயங்குநிலையைக் கணிப்பதில் தெளிவு ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்ளும் தமிழ்க் கல்வியாளன் ஆசிரியத் தொழிலை மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். கணினிப் பயன்பாட்டின் அடிப்படைகளோடு இவற்றைக் கற்றுத் தரும் பாடத்திட்டம், அவர்களுக்கு தமிழ் பயன்படு புலமாக இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஏராளமான வேலைகளைத் திறந்து விடும் என்பதை அனைவரும் அறிவர். ஊடகத்துறைகளில் மட்டும் அல்ல. பதிப்புத்துறை, விளம்பரத்துறை, பதிவுகள் துறை, படியெடுத்தல் துறை, தகவல்களை உள்ளீடு செய்யும் வேலைகள் எனப் பலவும் தமிழ்க் கல்வியாளர்களை முதன்மையாக வேண்டுவன தான். தமிழ்க் கல்வியைக் கற்பவர்கள் இவைகளையெல்லாம் அறியாமல் அல்லது ஈடுபாடு காட்டாமல் கற்றுச் சொல்லிகளாக இருக்கும் ஆசிரியத் தொழிலையே முதன்மை இலக்காகக் கொள்கின்றனர்.

மொழி பெயர்ப்பின் அடிப்படைகள் தெரிந்திருந்த போதிலும் பிற மொழி அறிவின் அடிப்படைகளைக் கூடக் கற்க வேண்டாம் என நாம் தவிர்த்து விட்ட நிலையில் மொழி பெயர்ப்புப் பணிகள் அனைத்தும் பிறதுறைப் படிப்பாளிகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. துறைசார் மொழி பெயர்ப்புகளுக்கு அவ்வத்துறைப் புலமையாளர்களோடு சேர்ந்து பணியாற்றும் அளவுக்காவது மொழிக் கல்வியாளர்கள் பிறமொழிகளின் அறிவை - குறிப்பாக ஆங்கில மொழியறிவைப் பெற்றாக வேண்டும்.


இலக்கியக் கல்வியின் எதிர்காலமும், இலக்கிய மாணவனின் எதிர்காலமும் முறையான நோக்கங்களைக் கொண்ட பாடத் திட்டங்களோடு தொடர்புடையவை என்பதை நாம் நம்ப வேண்டும். அப்பாடத் திட்டங்களை முறையாகக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஈடுபாடு குறைந்தால் பாடத்திட்டம் எதனையும் சாதித்து விடாது. ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள் தங்களின் பணிகளுக்கென அடிப்படையான தொழில் நுட்ப அறிவையும் இணைத்துக் கொள்ளும் போது அதன் சாத்தியங்கள் விரிவான எல்லைகளுக்குள் பயணம் செய்யும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.


தமிழாய்வு;தமிழியலாய்வு

தமிழ்க் கல்வியை நவீனப்படுத்தலில் தொடர்ச்சியாக தமிழியல் ஆய்வுகளுக்குள் நுழையலாம். ஆய்வு என்பது லத்தீன் மொழியில் Re- என்பதற்குத் திரும்பவும் அல்லது மீண்டும் ‘ Again’ எனவும் ‘ cercer’ என்னும் சொல்லுக்குத் ‘தேட’ ‘to search’ எனவும் பொருள் கிடைக்கும் அடிப்படையில் இரண்டு சொற்களின் இணைவாக ஆங்கிலச் சொல் ‘Research’ உருவாக்கப்பெற்றிருக்கிறது. ஒரு நிலையில் அறியாத ஒன்று குறித்த தகவல் தேடல் என்பதே ஆய்வு எனக் கொள்ளலாம். ஆய்வு என்பது என்ன? ஏன்? எப்பொழுது? எது? எங்கே? எப்படி? என்ற வினாச்சொற்களுக்கான விடைகளைத் தேடுவதும் அக்கேள்விகளுக்கான தேடலை சரியான முறையியலைப் பின்பற்றி முன் வைப்பதுமே ஆகும். இதற்கு முதல் தேவை ஆய்வுத்தலைப்பு என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்நிலையில் தான் ஆய்வுத்தலைப்பு ஆய்வில் முக்கியமாகிறது.

ஆய்வுத்தலைப்பு:

ஆய்வாளர் ஒருவர் ஆய்வின் தலைப்புக் கண்டடைந்து முடிவுசெய்வதென்பது, ஆய்வுப்பொருளின் வழியாகத் தலைப்பை இறுதியாக்கும் பணியாகும். அந்தப் பயணத்தில் ஆய்வாளர், விரிவான தனது புலக்கல்வியைத் துறைக்கல்வி, அதன் உட்பிரிவுநிலை எனக் குறைத்துக்கொண்டே வரவேண்டும். அதன் பிறகு தெரிவு செய்த தலைப்பை தொடர்ந்து மேற்பார்வையிட்டு நோக்கி இறுதியாக்கவேண்டும். ஒருவரின் விருப்பம் இலக்கணம் என்றால், அதற்குள் எவ்வகை இலக்கணம் என்ற கேள்விக்கு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என மரபான ஐவகைக்குள் எது என்பதை முதலில் முடிவுசெய்ய வேண்டும். பின்னர் அதன் நிகழ்காலத் தேவையையும் இருப்பையும் அறிந்துகொள்ளும் முன் பனுவல்களைத் தேடவேண்டும். அதற்குமுன்பு சில அடிப்படையான வினாக்களைத் தனக்குத் தானே கேட்டு விடை தேடிக்கொள்ளவேண்டும். அவை வருமாறு:
  • · அத்தலைப்பு உண்மையிலேயே ஆர்வமுடைய தலைப்புத்தானா எனக் கேட்டுக் கொள்ளுதல்.
  • · இந்தத்தலைப்பில் ஆய்வை முடிக்க கால அவகாசம் உள்ளதா எனக் கேட்டுக் கொள்ளுதல்.
  • · இந்தத் தலைப்பில் ஆய்வு செய்யத் தேவையான கருவிகள் உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுதல்
  • · நூலக வசதி போதுமானதா எனக் கண்டறிதல் .
  • · இந்த ஆய்வு முன் வைக்கும் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதானா அல்லது மேம்போக்கானதா எனப் பார்த்துக் கொள்ளுதல் .
  • · இந்தத் தலைப்பு புதியன கண்டுபிடிக்கக் கூடிய ஒன்றா? ஏற்கனவே அறிமுகமானதா?
  • · இந்த ஆய்வு விமரிசனப் பார்வையை வேண்டும் ஒன்றா என்றும், புதிய பார்வைக் கோணத்தை முன் நிறுத்தக் கூடியதா என்றும் அறிதல் போன்றன சில நிலைகள். இவற்றைச் செய்யாமல்
  • · குறிப்பானதாக இல்லாத -ஒன்றில் தொடங்குவது .
  • · குறிப்பான கருத்தியலுக்குள் நுழைவது .
  • · தலைப்பை முடிவு செய்து ஆய்வு செய்வது எனத் தீர்மானிப்பது ஆய்வை நகர்த்த உதவாது.
  • ஆரம்ப நிலையில் ஒரு ஆய்வுச் சுருக்கத்தை உருவாக்கித் தற்காலிகத் தலைப்புடன் தொடங்கினால், அடிப்படைத் தரவுகள் சரியான தலைப்பினையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிவிடும்.
  • · தலைப்புத் தேர்வுக்கு முதலில் ஆய்வாளரின் துறையை அறிய வேண்டும்.
  • · தலைப்புத் தேர்வுக்கு நூலக வாசிப்பு உதவலாம்
  • · புத்தகங்களைப் பார்ப்பது மூலம், ஆய்வு இதழ்களைப் படிப்பது மூலம், பொதுப் பார்வை நூல்களில் கண்டுபிடிப்பது பயணம் செய்வது மூலம், கலைக்களஞ்சியங்களில் தேடுவது மூலம் தலைப்பு உருவாகலாம்.
  • · கடைசி வாய்ப்பாக நெறியாளரை அணுகுவது.
அவர்தான் தலைப்பின் மையத்தினை உருவாக்க உதவுவார் என்றாலும் அவரே முடிவுசெய்வதாக ஆய்வுத்தலைப்பைக் கருதவேண்டியதில்லை. நடைமுறையில் பெரும்பாலான தமிழாய்வுகளுக்குரிய தலைப்புகளை நெறியாளர்களே வழங்குகிறார்கள் என்பது உண்மையென்றாலும், அந்நிலை மாற்றப்பட வேண்டும். தலைப்பு உறுதியாக்கப்படும்போது பின்வருவனவற்றையும் கவனத்தில் கொள்வது நல்லது.
 
  • · ஒருவரது ஆய்வு எத்தகையது என்ற கேள்விக்கு அது, முதன்மையானதாகவும் இருக்கலாம்; வழிநிலை ஆய்வாகவும் இருக்கலாம் எனப் பதிலளிக்கலாம்.
  • · முதன்மை ஆய்வு என்பது முன்னோடித் தன்மையுடைய கவனத்தையும் புலனாய்வையும் விளக்கத்தையும் கொண்டிருப்பது .
  • · துணைமை ஆய்வு என்பது ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழிநிலை ஆய்வாக அல்லது சார்பு நிலை ஆய்வாக அமைவது.
தலைப்பையும் தனது ஆய்வின் நிலையினையும் இறுதிசெய்தபின் பின்வரும் அறநிலைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையே ஒரு ஆய்வுக்குப் பயன்மதிப்பை உருவாக்கித் தரக்கூடியன. அவை: ஆய்வு நேர்மை (Hoesty) ,நடுநிலைப் பார்வை (Objectivity), ஒருமைப்பாடு (Integrity), கவனக்குவிப்பு (Carefulness), திறந்த மனநிலை (Openness), அறிவாய்வும் பொருண்மை மீது மதிப்பும் (Respect for Intellectual Property) பின்பற்றப்படவேண்டியன என எதிர்பார்க்கப்படுகின்றன . டேவிட் பிரெஸ்னிக் எழுதிய what is Ethics in Research and why is not Important என்னும் நூலில் சொல்லப்பட்ட இவற்றோடு சமூகப் பொறுப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்து ஆய்வுத் திருட்டு (Plagiriasm) , திரும்பச் செய்தல் (Dublication), சமரசம் செய்து கொள்ளுதல் (Compromising) போன்றன தவிர்க்கப்படவேண்டுமென வலியுறுத்துகிறார். தனது ஆய்வின் உற்பத்தி அளவை (Objectivity) விட தரத்தின் அளவே (Objectivity) முக்கியமானதாக அமையவேண்டுமென ஆய்வாளரும் நெறியாளர்களும் நினைக்கவேண்டும். ஆய்வுப்பொருளில் செய்யும் பயணம் சரியான ஆய்வுத் தலைப்பை நோக்கி நகர்த்தும். அதற்கான முதன்மையான வழிமுறை முன் பனுவல்கள் மதிப்பீடாகும்.

முன்பனுவல் மதிப்பீடு

ஒரு குறிப்பிட்ட பொருளில் இதுவரை வந்துள்ள ஆய்வுகளை, அச்சிடப்பெற்ற நூல்களைத் தொகுத்தல், விளக்குதல், திறனாய்வு அடிப்படையில் மதிப்பீடு செய்தல் என்பனவற்றைச் செய்யும் பணி இது. அதன்மூலம் ஓராய்வாளர் தான் முனைப்புகொள்ளும் ஆய்வுப்புலத்தில் எவ்வகையான போக்கு உள்ளது என்பதை அறிகிறார். அதன்மூலம் அப்புலத்தில் என்னென்ன முரண்பாடுகளும் விவாதங்களும் நடக்கின்றன என்பதை அறிகிறார். அவ்வறிதலின் நீட்சியாக அம்முரண்பாடுகளுக்கும் விவாதங்களுக்கும் விடைதேட முயல்கிறார். அம்முயற்சியின் காரணமாகத் தனது தலைப்பைச் சரியாக வரையறை செய்கிறார். தன்னைச் சமகால ஆய்வுப்போக்கின் நீரோட்டத்தில் நிறுத்தி அதன் எல்லைக்குள் நின்று விவாதிக்கும் வல்லமையுள்ளவராகக் காட்டுவதே முன்பனுவல் மதிப்பீட்டின் முதன்மையான பணி.

ஒரு முன்பனுவல் மதிப்பீட்டை வழக்கமான ஆய்வேட்டு வடிவத்திலேயே எழுதலாம். அதற்கொரு முன்னுரை, உடல் பகுதி, முடிவுரையென வடிவம் தருதல் எளிய முறையாகும். முன்னுரைப்பகுதியில் பொதுத்தலைப்பை முன்வைத்துவிட்டு, அது எவ்வகையான துறையின் பகுதியாக அல்லது சிக்கலை மையமிட்டதாக இருக்கிறது எனக் காட்டவேண்டும். இந்தத் தலைப்பில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுத் தலைப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டவேண்டும். அவை ஒவ்வொன்றும் பின்பற்றிய ஆய்வு முறையியல், பயன்படுத்திய தரவுகள், கொள்கைவேறுபாடுகள், ஆகியவற்றை முன்வைப்பதன் மூலம் வந்தடைந்த முடிவுகளைச் சொல்லவேண்டும். அந்த முடிவுகளுக்குப் பின்னும் அந்தத் துறையில் அல்லது புலத்தில் இருக்கும் இடைவெளிகளைச் சுட்டிக்காட்ட முடியும். புதிதாக ஒரு ஆய்வுப்பிரச்சினை எவ்வாறு உருவாகி எழுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, தான் எத்தகைய முறையியலைப் பின்பற்ற இருக்கிறேன் என்பதை முன்வைக்கவேண்டும். அந்த முன்வைப்பு விளக்க நிலைப்பட்டதா? ஒப்பு செய்யும் தன்மையானதா? மதிப்பீட்டுக் கோர்வையுடையதா? என்பதைச் சொல்லி ஆய்வின் நோக்கத்தை விளக்கிக் காட்டவேண்டும்.
 
முன்பனுவல் மதிப்பீட்டு முடிவுரை என்பது எடுத்துக்கொண்ட தலைப்பில் / தொடர்புடைய பொருண்மையில் அதுவரை நடந்துள்ளன் முக்கியமான ஆய்வுகள், நூல்கள், கட்டுரைகளை வரிசைப்படுத்திக் காட்டவேண்டும். அவைகளின் மையமான விவாதங்களையும் அடுக்கி, இப்போதைய நிலையில் அதன் பொருத்தப்ப்பாடும், பொருத்தமின்மையும் சுட்டிக்காட்டப் படவேண்டும். பின்னர் தான் செய்யப்போகும் ஆய்வில் இவைகள் எவ்வாறு களையப்படும் என்பதை முன்வைத்துத் தலைப்பை இறுதி செய்யவேண்டும்.
நிறைவாக, முன்பனுவல் மதிப்பீடு பின்வரும் வினாக்களுக்கு விடைசொல்லவேண்டும்


1. ஆய்வுக்குரிய பகுதியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

2. முக்கிய கருத்தியல்கள், காரணிகள், மாறுபாடுகளுக்கிடையில் உறவுகளை என்ன?

3. பயன்பட்டுள்ள கோட்பாடுகள் எவை?

4. முரண்பாடு மற்றும் பிற குறைபாடுகள் எவை?
5. வரையறுக்கப்பட்டவையா? முரண்பாடுகளோடு தெளிவற்றனவாக இருப்பதால் அல்லது ஆதாரம் இல்லாத காரணத்தால், மேலும் சோதனை தேவையிருக்கிறதா?

6. வடிவமைப்புகளை அல்லது முறைகள், தவறாக இருக்கின்றனவா?

7. இந்த கேள்வியை மேலும் கேட்டுத் தொடர வேண்டுமா?

8. ஒரு ஆய்வாளர் அதில் என்ன பங்களிப்பு செய்ய இருக்கிறார்?


இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கண்டடைந்த பின்னும் சரியான - தெளிவானதொரு ஆய்வுத்தலைப்பு கிடைக்காமல் போகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்