அரங்கியல் அறிவோம்: நாடகத்தின் வடிவம்

நாடகத்தின் வடிவம் பற்றிப் பேசப்போனால் அதன் அடிப்படையான குணாம்சம் என்ன என்ற கேள்வி எழும். நாடகத்தின் அடிப்படையான குணாம்சம் முரண்( conflict) தானே.
  •             முரண்தான் அடிப்படையான குணாம்சம். வெவ்வேறு தளங்களில் - வெளிப்படையாகவோ, வெளித்தெரியாமலோ- முரண் அமைகின்றபொழுது நாடகம் வடிவம் கொள்கிறது.

அப்படியானால் முரண் உள்ள -வாசிப்புக்கான ஒரு எழுத்துப் பிரதி நாடகமாகி விடுமா..?
  •            நாடகம் ஆகிவிடாது.மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில்- நிகழ்த்திக் காட்டுவதின் மூலம், படைப்புச்செயல் முழுமையடையும் எழுத்துப் பிரதிதான் நாடகம். அரங்கக் கலை சார்ந்த , கலைஞர்களின் நிகழ்த்துதல் செயல்பாட்டிற்கு ஏதுவற்ற எழுத்துப் பிரதி நாடகம் ஆகாது. நிகழ்த்தப்பட வேண்டும்; அப்பொழுது முரணும், முரணின் காரணிகளும், விளைவுகளும் வெளிப்பட வேண்டும்.
    •   காப்பியத்தின் இலக்கணம் என்ன என்று சொல்ல வந்த தண்டியலங்காரம்கூட முரண்பற்றிப் பேசத்தான் செய்கிறது. தன்னேரில்லாத் தலைவன் X அவனுக்கு எதிரிடையாக இன்னொரு கதாபாத்திரம் என்று அது சொல்லும். அந்த இலக்கணப்படி எழுதப்பட்ட காப்பியமாகத் தமிழில் ராமாயணத்தை மட்டுமே சொல்ல முடியும். கம்பனின் ராமாயணம் தொடக்கம் முதலே ராமனின் நாயகத்தனத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு ராமனுக்கு எதிராக ராவணனை இடையில் கொண்டுவந்து மோதவிடுகிறது. நாடகத்திலும் இந்த அம்சம் உண்டு. என்றாலும் நாடகத்தின் அம்சம் கதாபாத்திர முரண் மட்டுமல்ல. நாடகாசிரியர் காலத்தை உருவாக்கவும் வெளியை உருவாக்கவும் தனித்த சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும். நாடகப் பிரதிக்குள் காலம் எழுப்பும் சிக்கல்களையும்,  வெளியினைக் கைக்கொள்ளவும் பயன்படுத்தவும் நடக்கிறமோதல்களையும், அவ்விரண்டின் பின்னணியில் பாத்திரங்களின் முரணையும் முன்வைக்க முயல்கிறது.
அரிஸ்டாடிலும் பரத முனியும் சொல்லியுள்ள ஆரம்பம், சிக்கல், வளர்ச்சி, உச்சகட்டம், முடிவு என்கிற நேர்கோட்டு வடிவம் நவீன  நாடகத்தின் வடிவம் அல்ல .. என்கிறீர்கள்
  •             கதாபாத்திரங்கள் சார்ந்த ஆரம்பம், உச்சகட்டம், முடிவு என்ற நேர்கோட்டு வடிவத்தை நவீன நாடகத்தில் தேடவேண்டியதில்லை. நவீன நாடகம் எதிரெதிர் கதாபாத்திரங்களை- நாயகத்தனம்x வில்லத்தனம் - மோதவிட்டு வளர்ச்சியடைவதில்லை. நவீன நாடகத்தில் சிந்தனைகளும் கருத்தமைவுகளும் நாடகத்திற்குள்ளேயே அடையாளங்காட்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாடகம் பேசும் கருத்தமைவுக்கோ, சிந்தனைக்கோ எதிரான கருத்தமைவும் சிந்தனையும் நாடகத்திற்கு வெளியே கூட இருக்கலாம்.

இது நவீன நாடகமா..? நவீன நாடகம் என்றால் இவையெல்லாம் இருக்க வேண்டுமா..? இவற்றில் எத்தனை நவீன நாடகங்கள் ஆகும்..? என்கிறமாதிரி கேள்விகள் பத்திரிகை விமரிசனங்களிலும்,நேரடிப் பேச்சுகளிலும் கலந்துரையாடல்களிலும், கேட்கப படுகின்றன. நாடகம் என்ற சொல்லோடு ‘ நவீன’ என்ற முன்னொட்டு சேர்க்கப் டுவதால்தான் இந்த மாதிரி கேள்விகள் எழுகின்றன. இந்தப்பதச் சேர்க்கைக்குக் ‘காலம்’( Period) தான் அடிப்படையா..?
  •             நிச்சயமாக இல்லை.  காலம் ஓர் அடிப்படைதான்.’ தற்கால நாடகம்’ அல்லது  ‘ சமகால நாடகம்’ ( Contemporary theatre) என்ற பதப்பிரயோகத்தில் காலம் தான் முக்கியமான அடிப்படை. ஏதாவது ஒரு வருடத்தை அல்லது நிகழ்வை அல்லது மாற்றத்தை ஆதியாகக் கொண்டு இன்று வரையுள்ள மாற்றத்தை ஆதியாகக் கொண்டு இன்று வரையுள்ள ஆண்டுகளைத் ‘தற்காலம’ அல்லது ‘சமகாலம’ என்று சொல்லி விடலாம். அந்த வருடங்களில் எழுதப்பட்ட எல்லாமும் அக்காலகட்ட இலக்கியம் தான். பழையனவற்றின் தொடர்ச்சியும், நிலைபெற்று விட்ட புதியனவும் நிலைபெற முயற்சிக்கும் புதியனவும் அதில் அடங்கும். ஆனால் ‘நவீன‘ என்பதில் இவ்வளவு பரப்பு கிடையாது.பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்றுவிட்டனவும், அங்கீகாரம் பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே’ நவீன ‘ என்பதில் அடங்கும்.பழைமைக்கு ‘நவீன’த்தில் இடமே இல்லை என்றே சொல்லலாம். விமரிசிக்கப்படும் ஒன்றாகவும் புத்தாக்க வாசிப்பின் வெளிப்பாடாகவும் மட்டுமே பழைமை நவீனத்தில் இடம் பெறும்.நவீனம் என்பது ஓர் அணுகுமுறை ( view point) அல்லது வாழ்முறை ( way  of living) என்று சொல்லலாம்.

                       இந்த நிலையில் உள்ளடக்க ரீதியில் -வடிவரீதியில்-                            மேடையேற்ற ரீதியில் புதிய வழித்தடங்களைப் போடும்                  நாடகங்களை நவீன நாடகங்கள் எனலாம்.உள்ளடக்கம்,                 வடிவம், மேடையேற்றம் என்ற மூன்று ரீதிகளும்                                      புதியனவாக இருக்கலாம். அதே வேளையில் இம்மூன்றும்             ஒன்றோடொன்று பின்னியுள்ளன என்பதும் உண்மைதான்.
ஒன்று மட்டுமே கூடப் புதியதாக இருப்பது சாத்தியமா..?
  •            சரியாகச் சொல்வதானால் சாத்தியமில்லை. ஒரு புதிய உள்ளடக்கம், புதிய வடிவத்தில் வெளிப்படுவதுதான் சரி. புதிய வகையான மேடையேற்ற ரூபத்தை தேடுவதும் மேற்கொள்வதும் அவசியம் மட்டும் அல்ல; தவிர்க்க முடியாததும் கூட. பழைய வடிவத்திலும், மேடையேற்ற பாணியிலும் புதிய உள்ளடக்கம் வெளிப்பட்டால்’ நவீன நாடகம்’ அல்ல என்றும் கூற முடியாதே. ஆனால் அப்படி வெளிப்படுவது என்பது இயலாத காரியம்.

         ‘காதல் புனிதமானது; குடும்ப அமைப்பு போற்றுதற்குரியது; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ‘போன்ற குடும்பச் சமாச்சாரங்களும்,’ நியாயம் வெல்லும், உழைப்பே வெற்றிக்கு ஆதாரம்’ போன்ற சமூகச் சமாச்சாரங்களும் புதிய வடிவத்தில், புதிய மேடையேற்ற ரூபத்தில் வரும்பொழுது நவீன நாடகமாக ஆகி விடுமா..?
            
  •            ஆகாது. ஆகிவிட முடியாது. இந்தச் சமாச்சாரங்கள் புதிய வடிவத்தையோ மேடையேற்ற ரூபத்தையோ தனதாக்கிக் கொள்ள இயலாதவை.நைந்து போன நடப்பியல் ( realism) பாணி அல்லது மெலோடிராமாதான் அவைகளுக்குச் சொந்தமானது.
  ஆக உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை                 எதிர்த்து அங்கீகாரம் பெற்று விட்டனவும்,பெறப் போராடிக்          கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்;    பழைமைக்கு நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில்   கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக                 நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன                      மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..?


நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம்          பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும்                                               பொருந்தக் கூடியதே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்