கீழடி: வரலாறும் போராட்டமும்


கீழடித் தொல்லியல் ஆய்வில் தொய்வு ஏற்படுத்தப்படுகிறது என்ற ஐயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐயத்தை உறுதியாக நம்பியொரு போராட்டத்தை முன்னெடுக்கிறது இடதுசாரிக் கட்சியின் பண்பாட்டு அமைப்பான த.மு.எ.க.சங்கம். போராட்டத்தின் வழிமுறையாக “ பிடிமண் எடுப்பு” என்ற மரபுசார் சடங்கொன்றைக் கைக்கொண்டிருக்கிறது. கைக்கொண்ட சடங்கின் அடிப்படைத்தன்மையும், அதில் இணையக்கூடிய வெகுமக்களின் மனநிலையும் எத்தகையன என்பதை இப்போது சரியாகக் கணிக்கமுடியாது.

கீழடி ஆய்வின் தொய்வுக்கான காரணங்கள் நடைமுறை சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும் கைவிடக்கூடிய ஒன்றல்ல என்பதை உணரவேண்டியது அரசுகளின் பணி. தொல்லியல் ஆய்வுகளின் வழியாகக் கிடைக்கக்கூடிய முடிவுகள் ஒருமாநில எல்லைக்குள்ளோ, தேச எல்லைக்குள்ளே நின்றுபோவன அல்ல. உலகவரலாற்றில் ஒரு நிலப்பரப்பின் இடம்பற்றிய - அங்கு வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றுப் பின்புலம் பற்றிய- மனிதகுலத்திற்க்கு அந்த நிலப்பரப்பு வழங்கிய அறிவுக்கொடை பற்றிய முடிவுகளில் மாற்றங்களை முன்வைக்கும் முடிவுகள் கிடைக்கலாம். அதனை அரசு அமைப்புகள் உணரவேண்டும். மைய அரசு உணர்ந்திருக்கிறது; மாநில அரசு உணரவில்லை என்பதான தோற்றம் இப்போது கிடைக்கிறது.தொல்லியல் ஆய்வுகள் பெரும்செலவும் காலமும் தேவைப்படுபவை. தனிநபர்களால் முன்னெடுத்து முடித்துவிடுபவையல்ல. மையஅரசு நிறுவனங்களின் துணையில்லாமல் அவற்றைத் தொடங்கவும் தொடரவும் முடியாது. இந்தியாவில்/ தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் பலவற்றில் முடிவுகள் அடையப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. கிடைக்கும் முடிவினால் புதியதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றால், ஆய்வுகளைத் தொடர்வது தேவையில்லையென ஆய்வாளர்கள் முடிவெடுக்கலாம். கீழடியில் ஆய்வினை மேற்கொண்டவர்கள் தொடரவேண்டுமென விரும்பினார்கள். கிடைக்கும் முடிவுகள், தமிழ் நிலப்பரப்பின் வரலாற்றை, அதன் வாழ்வியல் முறைமையை, அப்பரப்பில் வாழ்ந்த மனிதர்களின் அறிவைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னகர்த்திப் போகும் வாய்ப்புண்டு எனக் கருதினார்கள். ஆனால் இப்போது தடுக்கப்படுகிறது; திசைதிருப்பப்படுகிறது என்பது வெளிப்பட்டுள்ளது.
தடுக்கப்படுவதிலும் திசைமாற்றம் செய்யப்படுவதிலும் உள்நோக்க அரசியல் இருக்கிறது என்பது போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பான த மு எ க சங்கத்தின் வாதம். அந்த வாதம் தோன்றுவதற்கு எல்லாவகை நியாயங்களும் இருக்கின்றன.எல்லாத் தளங்களிலும் இந்துத்துவத்தின் முன்வைப்பாக இருக்கும் “ஒற்றையை” வலியுறுத்தும் நிலைபாடுகொண்ட சிந்தனையின்மேல் எழும் அதிகாரத்தின் இயக்கத்தைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதிகாரத்திற்கு வந்துள்ள இந்துத்துவம் தனது இருப்புக்கும், பரவலுக்கும் சாதகமான முடிவுகளைத் தராத ஆய்வுகளைத் தொடர்வதற்கு அக்கறைகாட்டாது என்பது வெள்ளிடைமலை. தனக்கிணையான இன்னொரு அறிவுக்கூட்டம் இருந்தது என்ற முடிவை நோக்கிய ஆய்வைத் தொடரவும் ஊக்குவிக்கவுமான பெருந்தன்மை எப்போதும் அதற்கு இருந்ததில்லை.
அரசியல் பொருளாதாரத் தளத்தில் தனது கருத்துகளாலும் இயக்கங்களாலும் இந்துத்துவத்திற்கு மாற்றான அமைப்பு எனப் பாவனை காட்டும் இடதுசாரிகள் போராட்டக்கருவியாகப் பிடிமண் எடுத்தலைக் கைக்கொண்டுள்ளனர். பிடிமண் எடுத்தல் என்பது மரபை எதிர்க்கும் புதியகருவியல்ல. அது மாற்றுமரபின் அடிப்படைக்கருவி. இந்தியச் சமயங்களின் இருப்பிலும் பரவலிலும் தொடரும் கோயில் உருவாக்கச் சடங்குகளில் ஒன்று. வைதீகமரபு கோயில் உருவாக்கத்திற்கு முன்வைக்கும் சடங்குகளின் வெளிப்பாடு கோயில்கட்டிக் கும்பாபிஷேகம் செய்தல். புதிய கோயிலாயிலும், பழைய கோயிலாயினும் கும்பாபிஷேகம் செய்யத்தகுதியான மொழி சம்ஸ்க்ருதம்; தகுதியானவர்கள் ப்ராமணர்கள் என்பது நம்பிக்கையும் வலியுறுத்தலும். பிடிமண் எடுத்தல் என்பது இடம்பெயர நேரும்போது ஒருகூட்டம் / சாதிக்கூட்டம் தங்களின் ஆதியிடத்திலிருந்து மண்ணை எடுத்துச் சென்று புதிய இடத்திலொரு வழிபாட்டுருவத்தை உண்டாக்கிக்கொள்ளுதலாகும். குலதெயவங்களின் பிடியிலிருந்து விடுபட விரும்பாத கூட்டங்களின் சடங்கு . கும்பாபிஷேகம் மத நம்பிக்கையிலிருந்து உருவான சடங்கு. பிடிமண் சாதி அடிப்படையிலிருந்து உருவான சடங்கு. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மதமும் சாதியும் இணைந்த சக்திகளாகவே இருந்துள்ளன. ஒன்றின் இடத்தில் இன்னொன்று என்பதாகவே இயங்கியிருக்கின்றன. சாதிகளுக்குள் முரண்பாடுகள் உண்டு; மோதல்களுண்டு; வன்முறை உண்டு. ஆனால் மதமும் சாதியும் மோதிக்கொண்டதாக அறியமுடியவில்லை. ஒன்றை இன்னொன்று எதிர்த்ததாகச் சான்றுகள் கிடைக்கவில்லை.
சிறுபான்மைக்கூட்டம் தனக்கானதாக நம்பிய வைதீக/ சமஸ்கிருதமரபைப் பெருமரபு எனவும், அதற்குள் அடங்காத பெருந்திரள் மரபைச் சிறுமரபெனவும் பெயரிட்டுப் பேசிய சொல்லாடல்கள் கல்விப்புலத்திற்குள் இருந்தன. பெரு - சிறு என்பதில் இருக்கும் ஆதிக்கமனநிலையை உணர்ந்தவர்கள், சிறுமரபு என்ற சொல்லாடலைக் கைவிட்டுவிட்டு கிராமியமரபு, நாட்டார் மரபு, நாட்டார் வழக்காற்றியல் மரபு என நகர்ந்தார்கள்.நாட்டார் மரபுகள் பெருந்திரள் மரபுகளின் வெளிப்பாடாக இருப்பதை உணர்ந்த இடதுசாரிகள் அதனைக் கவனத்துக்குரியனவாக நினைத்தார்கள். பெருந்திரளை அரசியல்மயப்படுத்த விரும்பும் நோக்கம் அவர்களுக்கு இருப்பதால் அவற்றின் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது.
கீழடித் தொல்லியல் ஆய்வை மையமிட்டு நடக்கும் தமிழர் உரிமை மாநாடுகளும்கூட அதன் வெளிப்பாடுகள்தான். சமயமென்னும் பேரமைப்புக்குள் அடங்கிப்போவதாகவே இருக்கும் சாதியென்னும் குறு அமைப்பைக் கொண்டு எதிர்வுகளை உருவாக்கமுடியுமென நம்பும் த மு எ க சங்கத்தின் முயற்சி எவ்வளவுதூரத்தைக் கடக்குமெனத் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்