கதையிலிருந்து நாடகம்: இமையத்தின் அணையும் நெருப்பை முன்வைத்து
இமையத்தின் அணையும் நெருப்பு கதையைப் பத்திரிகையில் வந்தபோதும், புத்தகத்தில் ஒன்றாக வந்தபிறகும் வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். அந்தக் குறிப்பு இதோ. அணையும் நெருப்பு எழுப்பும் வினாக்கள் உலகப் பொதுவான ஒன்று. பாலியல் வேட்கையின் மீதான விசாரணையாக அமைந்துள்ள இந்தக் கதை எழுதப்பட்டுள்ள முறையே கவனிக்கத்தக்க ஒன்று. அக்கதையில் இடம் பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களில் ஒன்று ஒற்றைச் சொல்லைக் கூடப் பேசாமல் (ஆண்) கல்லைப் போல அசைவற்று அமர்ந்திருக்க, சந்தோஷம் பேசுகிறாள். பேசுகிறாள்.. பேசிக் கொண்டே இருக்கிறாள். அவளது பேச்சு- அவளின் கேள்விகள் அந்த இளைஞனிடம் மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. பெண்களின் எந்தச் சூழலையும் கவனிக்காமல், தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் ஆண்களின் மீது வீசப்படும் தாக்குதல்கள் அவை.